இந்தியா

உத்தரப் பிரதேச பஞ்சாயத்து தேர்தலில் 25 வருடங்களுக்குப் பின் வாக்களித்த கிராமவாசிகள்: தாதா விகாஸ் துபே என்கவுன்ட்டரால் விலகிய அச்சம்

ஆர்.ஷபிமுன்னா

உத்தரப் பிரதேச பஞ்சாயத்துத் தேர்தலில் பிக்ரு கிராமவாசிகள் 25 வருடங்களுக்குப் பின் வாக்களித்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் பிக்ரு கிராமத்தைச் சேர்ந்த விகாஸ் துபே போலீஸ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார்.

இவர் மீது இருந்த அச்சத்தாலேயே கடந்த 25 வருடங்களாக பிக்ரு கிராமவாசிகள் பஞ்சாயத்துத் தேர்தலில் வாக்குப்பதிவு செய்யாமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் இன்று தங்களின் கடமையைச் செய்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் நான்கு கட்டங்களாக ஏப்ரல் 15 முதல் பஞ்சாயத்துத் தேர்தல் தொடங்கிவுள்ளது. இதில், கான்பூரின் பிக்ரு கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதை சுமார் 25 வருடங்களுக்குப் பின் முதன்முறையாக வாக்குகளைப் பதிவு செய்திருப்பதாக பிக்ரு கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு அப்பகுதியின் பெரிய ரவுடியாக இருந்த விகாஸ் துபேயின் அச்சமூட்டும் நடவடிக்கையே காரணமாகியுள்ளது.

உ.பி.,யின் முக்கிய ரவுடியான விகாஸ் துபே மீது காவல்நிலையத்தில் கொலை உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தன. இருப்பினும் அவரை கான்பூர் போலீஸார் பல்வேறு காரணங்களால் கைது செய்யவில்லை.

கடந்த 1995 இல் முதன்முறையாக பிக்ரு கிராமப் பஞ்சாயத்தின் தலைவரானர் விகாஸ் துபே. தொடர்ந்து அப்பதவியில் துபே அல்லது அவரது குடும்பத்தாரே இருந்துள்ளனர்.

இவர்கள் அனைவருமே போட்டியின்றி தேர்வாகி வந்துள்ளனர். இதன் பின்னணியில் விகாஸ் துபேவின் மிரட்டலும், வீசிய பணமும் இருந்துள்ளது.

இந்தமுறை தேர்தலில் விகாஸ் துபே உயிருடன் இல்லை என்பதால் பிக்ருவின் தலைவர் பதவிக்கு 10 பேர் வேட்பாளர்களாகி இருந்தனர்.

இவர்களில் ஒருவரை தேர்வு செய்ய அக்கிராமவாசிகள் 25 வருடங்களுக்குப் பின் இன்று வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

விகாஸ் துபே பின்னணி:

தன்னை கைது செய்ய வந்த கான்பூர் போலீஸார் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியவர் உத்திரப் பிரதேச ரவுடியான விகாஸ் துபே. கான்பூரின் பிக்ரு கிராமத்தில் கடந்த வருடம் ஜுலை 2 நள்ளிரவில் நடைபெற்ற இச்சம்பவத்தில் 8 போலீஸார் வீரமரணம் அடைந்தனர்.

இச்சம்பவம், நாடு முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தலைமறைவான துபே, கடந்த ஜூலையில் மத்தியப்பிரதேசம் உஜ்ஜைனின் காலபைரவன் கோயிலில் போலீஸாரிடம் சரணடைந்திருந்தார்.

அவரை கான்பூர் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மறுநாள் அழைத்து வந்தனர். அப்போது, வழியில் உடன் இருந்த காவலரின் துப்பாக்கியைப் பறித்து சுட்டுவிட்டுத் தப்ப முயன்றதால் விகாஸ் துபே என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

SCROLL FOR NEXT