கேரளாவில் நாளை மற்றும் நாளை மறுநாள் (16, 17-ம் தேதி) மாநிலம் முழுவதும் 2.50 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்ய கேரள அரசு முடிவு எடுத்துள்ளது.
முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று நடந்த உயர்மட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு கடும் முயற்சிகள் செய்து வருகிறது. குறிப்பாக அதிகமான அளவில் பரிசோதனை, கடும் கட்டுப்பாடுகள், தீவிரமான தடுப்பூசி முகாம் ஆகியவை மூலம் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியும் எனக் கருதி அதற்கான பணியில் இறங்கியுள்ளது.
அதன்படி, நாளை மற்றும் நாளை மறுநாள் 2.50 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்ய அரசு முடிவு எடுத்துள்ளது.
இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயன் இன்று கூறியதாவது:
“அடுத்த 2 நாட்கள் தீவிரமான கரோனா பரிசோதனை செய்வதற்காக அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான கருவிகள், உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்ட ஆட்சியருக்கும் வழங்கப்பட்ட இலக்குகளை அடைந்து பரிசோதனையை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டவர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்யக் கேட்டுக்கொள்கிறேன்.
முன்களப் பணியாளர்களும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும். குறிப்பாக பொதுப் போக்குவரத்துத் துறையில் பணியாற்றுவோர், ஹோட்டலில் பணிபுரிவோர், சுற்றுலாத்துறை, கடைகள், ஹோட்டல்கள், மார்க்கெட்டுகள், சேவை மையங்கள் ஆகியவற்றில் பணிபுரிவோர், டெலிவரி பணியில் இருக்கும் ஊழியர்கள் என அனைவரும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.
கரோனா வைரஸ் திரள் எங்கு அதிகமாக இருக்கும் என அடையாளம் காணப்பட்டுள்ளதோ அந்த இடங்களுக்கு மொபைல் பிசிஆர் பரிசோதனை வாகனம் அனுப்பி வைக்கப்படும். அதன் மூலம் பரிசோதனை செய்யலாம்.
மேலும், திருமணம், வீட்டில் நடக்கும் சுபநிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் நடத்த அரசிடம், மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெற்று நடத்த வேண்டும்.
இந்த நிகழ்ச்சிகளில் உள்ளரங்குகளில் 75 பேரும், வெளிப்புறங்களில் 150 பேரும் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். இதுபோன்ற நிகழச்சிகளில் பங்கேற்போர் சமூக விலகலைக் கடைப்பிடித்து இருப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். மேலும், மாணவர்களுக்கான டியூஷன் மையங்களும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது”.
இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.
அடுத்த 2 நாட்கள் பரிசோதனையைத் தீவிரப்படுத்தும்போது, கரோனா பாதிப்பு எண்ணிக்கை அடுத்துவரும் நாட்களில் கேரளாவில் கடுமையாக அதிகரிக்கும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா, தலைமைச் செயலாளர் வி.பி.ஜாய், மாநில காவல்துறை தலைவர் லோக்நாத் பேரா, பல்துறைச் செயலர்கள், மூத்த காவல்துறை அதிகாரிகள், மாவட்ட மருத்துவ அதிகாரிகள் பங்கேற்றனர்.