உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் நடந்துவரும் கும்பமேளாவில் பங்கேற்க வந்திருந்த மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மகா நிர்வானி அஹாராவின் தலைவர் சுவாமி கபில் தேவ் கரோனா தொற்றால் உயிரிழந்தார்.
சித்தரை முதல் நாள் நேற்று மேஷ் சங்கராந்தி மற்றும் பைஷகி ஆகியவற்றைக் குறிக்கும் நாளாக வடமாநிலங்களில் கருதப்படுகிறது. இந்த நாளில் நடக்கும் கும்பமேளாவில் புனித நீராடுதல் மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. இதையடுத்து, கும்பமேளாவில் 2-வது புனித சாஹி நீராடுதலுக்காக கடந்த ஒரு வாரமாக லட்சக்கணக்கான மக்கள் ஹரித்துவார், ரிஷிகேஷ் கங்கை நதிக்கரையில் திரண்டு புனித நீராடினர்.
உத்தரகாண்ட் அரசின் கணக்கின்படி கடந்த 2 நாட்களில் மட்டும் சாஹி புனித நீராடலில் மட்டும் 48 லட்சத்துக்கும் அதிகமானோர் வந்து பங்கேற்றதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் கரோனா 2-வது அலை அச்சுறுத்தி வரும் நிலையில், அதுகுறித்து எந்தவிதமான கவலையும் இல்லாமல், தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாமல், முகக்கவசம், சமூக விலகலைப் பின்பற்றாமல் நீராடினார்கள்.
போலீஸாரும், சுகாதாரத் துறையினரும் இலவசமாக முகக்கவசங்களை வழங்கியும் அதை அணிவதற்குப் பெரும்பாலான மக்களும், சாதுக்களும் மறுத்தனர். சமூக விலகலைக் கடைப்பிடிக்க போலீஸாரும், சுகாதாரத் துறையினரும் ஒலிபெருக்கியில் அறிவுறுத்தியபோதிலும் அந்த விதிகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டன.
கடந்த 10-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை கும்பமேளாவில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 751 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 2,171 பேருக்கு முதல் கட்டமாக கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கும்பமேளா திருவிழாவில் பங்கேற்க மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அகாராவின் மகாமண்டலேஸ்வர், மகா நிர்வானி அஹாராவின் தலைவர் சுவாமி கபில் தேவ், ஹரித்துவார் வந்திருந்தார். கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்றபின் அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து, ஹரித்துவாரில் உள்ள கைலாஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 13-ம் தேதி உயிரிழந்தார் என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஹரித்துவார் தலைமை மருத்துவ அதிகாரி எஸ்.கே.ஜா கூறுகையில், “ கரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மகா நிர்வானி அஹாராவின் தலைவர் சுவாமி கபில் தேவ் சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 13-ம் தேதி உயிரிழந்தார்” எனத் தெரிவித்தார்.