இந்தியா

பதிவுகள் 2015: கவனிக்கத்தக்க இந்திய - இலங்கை உறவு

பிடிஐ

அண்டை நாடுகளுடன் சுமுகமான நட்புறவு பேணப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தனது பதவியேற்பு விழாவிலேயே உறுதியளித்திருந்தார். பதவியேற்பு விழாவுக்கே சர்ச்சைகளை மீறியும் அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்சவை அழைத்திருந்தார்.

இந்நிலையில், 2015-ம் ஆண்டு இந்தியா - இலங்கை உறவு இணக்கமாகவே இருந்ததாகக் கூறப்படுகிறது.

2015 இலங்கை அரசியலில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஜனவரியில் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்ச தோல்வியடைந்ததும் சிறிசேனா வெற்றி பெற்றதுமே அது.

அதன் பின்னர் இந்தியா - இலங்கை இடையேயான 10 முக்கிய நிகழ்வுகள்

முதல் பயணம்:

இலங்கை அதிபராக பொறுப்பேற்ற மைத்திரிபால சிறிசேனா தனது முதல் நாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வந்தார். அவரது இந்தப் பயணம் சர்வதேச அளவில் பேசப்பட்டது. காரணம் இலங்கை தனது சார்பை சீனாவிடமிருந்து இந்தியாவுக்கு மாற்றியதாக இந்தப் பயணம் பார்க்கப்பட்டது.

3-வது தலைவர்:

சிறிசேனா இந்தியா வந்து சென்ற பிறகு மார்ச் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்குச் சென்றார். 1987-க்குப் பிறகு இந்தியப் பிரதமர் இலங்கை செல்வது இதுவே முதல் முறை. தவிர தமிழர்கள் வசிக்கும் யாழ்ப்பாணம் பகுதிக்கும் சென்ற அவர் இலங்கை தமிழர்களுக்காக நலத்திட்ட உதவிகளை செய்தார். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேருவுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் சென்ற மூன்றாவது தலைவர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

4 ஒப்பந்தங்கள்:

இந்தியா இலங்கை இடையே அணுசக்தி ஒப்பந்தம் உட்பட 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. வெளிநாட்டுடன் இலங்கை அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது இதுவே முதன்முறை.

வாக்குறுதி நிறைவேற்றம்:

ஏற்கெனவே உறுதியளித்ததற்கு ஏற்ப போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் ரயில்வே திட்டத்தை மோடி தொடங்கி வைத்தார்.

பரபரப்பான பிரதமர் தேர்தல்:

அதிபர் தேர்தலில் தோற்ற ராஜபக்ச பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்ற முழு முனைப்புடன் களம் கண்டு மண்ணைக் கவ்வினார். ரணில் விக்கிரமசிங்கே பிரதமரானார். ராஜபக்சவின் தோல்விக்கு பின்னணியில் இந்திய உளவு அமைப்புகளின் சதி இருப்பதாக சலசலக்கப்பட்டதை மறக்க முடியாது.

ரணிலின் இந்தியப் பயணம்:

அதிபர் சிறிசேனாவைப் போலவே ரணில் விக்கிரமசிங்கேவும் பிரதமர் பதவியேற்றபின் தனது முதல் பயணமாக இந்தியா வந்தார்.

மீனவர் பிரச்சினை:

இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக இருநாடுகளுக்கும் இடையே விரிவான ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது இன்றளவும் தொடர்ந்தாலும் நல்லெண்ண அடிப்படையில் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளது.

சீனாவுக்கு செக் வைத்த சிறிசேனா:

முந்தைய அதிபர் ராஜபக்ச சீனாவுடன் நெருங்கிய நட்பு பாராட்டி வந்தார். இது இந்தியாவுக்கு மிகப்பெரிய இடையூறாக இருந்தது. இந்நிலையில் அதிபர் சிறிசேனா சீனாவுடனான ஒப்பந்தங்களை மறு பரிசீலனைக்கு உட்படுத்தியுள்ளார். குறிப்பாக சீனாவுக்கு வழங்கப்பட்ட கொழும்பு துறைமுக நகர திட்டம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது இந்தியாவுக்கு நிம்மதி அளித்துள்ளது.

தமிழர்களுக்காக...

புதிய அரசு தமிழர்களுக்கு சில சகாயம் செய்துள்ளது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், வடக்கு பகுதிகளுக்குச் செல்வதற்கான தடையை தளர்த்தியது, பொதுமக்களிடம் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திருப்பியளித்தது, விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கியது ஆகிய நடவடிக்கைகளை சுட்டிக் காட்டலாம்.

ஓட்டு போடாத இந்தியா:

போர்க்குற்றம் தொடர்பான இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தில் 2009, 2012, 2013 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக இந்தியா 2015-ல் வாக்களிக்காமல் புறக்கணித்தது.

இப்படியாக 2015-ம் ஆண்டில் இந்தியா - இலங்கை உறவு சுமுகமாகவே சென்றுள்ளது.

SCROLL FOR NEXT