முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நிருபர்களுக்கு அளித்த பேட்டி | படம் ஏஎன்ஐ 
இந்தியா

அச்சுறுத்தும் கரோனா: டெல்லியில் வார இறுதிநாட்கள் ஊரடங்கு: முதல்வர் கேஜ்ரிவால் அறிவிப்பு

பிடிஐ


டெல்லியில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அதைக்கட்டுப்படுத்தும் நோக்கில் வார இறுதிநாட்கள் ஊரடங்கை முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று பிறப்பித்துள்ளார்.

நாடுமுழுவதும் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். இதில் டெல்லியில் மட்டும் கடந்த 24 மணிநேரத்தில் 17,282 பேர் பாதிக்கப்பட்டனர், 104 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று பிறப்பித்துள்ளார். முதல்வர் கேஜ்ரிவால் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

டெல்லியில் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு வார இறுதிநாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. புதிய கட்டுப்பாடுகளின்படி ஷாப்பிங் மால்கள், உடற்பயிற்சி கூடங்கள், ஸ்பா, கூட்ட அரங்குகள் அனைத்தும் வார இறுதிநாட்களில் மூடப்படும்.

ரெஸ்டாரண்ட், ஹோட்டல்களுக்குச் சென்று மக்கள் உணவு சாப்பிடத் தடை செய்யப்படுகிறது. தேவைப்பட்டால், வீடுகளுக்கு பார்சல் எடுத்து வரலாம்,அல்லது வீடுகளுக்கு கொண்டு வந்து வழங்கும் சேவைக்கு அனுமதிக்கப்படும்.

திரையரங்குகள் 30 சதவீத பார்வையாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதிக்கப்படும். வார இறுதி நாட்களில் அத்தியாவசிய சேவைகள், திருமணங்கள் ஆகியவற்றுக்குத் தடையில்லை. ஆனால், ஏற்கெனவே அரசு கூறியுள்ளபடி திருமணம் போன்ற விஷேசங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் பங்கேற்க வேண்டும்.

டெல்லியில் எந்த மருத்துவமனையிலும் படுக்கைகளுக்கு தட்டுப்பாடுஇல்லை. தற்போதுவரை 5 ஆயிரம் படுக்கைகள் கரோனா நோயாளிகளுக்காக காலியாக இருக்கின்றன. தேவைப்பட்டால் படுக்கைகளை அதிகப்படுத்தும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

மார்க்கெட்டுகள் வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே இயங்க வேண்டும். அங்கு காய்கறிகள் வாங்கவரும் மக்களை ஒழுங்குபடுத்தவும், முகக்கவசமம் அணிந்து, சமூக விலகலுடன் இருக்கிறார்களா என கண்காணிக்கப்படும்.

இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT