ஹரித்துவாரில் நேற்று புனித நீராடிய பக்தர்கள் | படம் உதவி: ட்விட்டர். 
இந்தியா

கும்பமேளாவில் காற்றில் பறந்த கரோனா தடுப்பு விதிகள்; 13 லட்சம் பேர் ஹரித்துவாரில் புனித நீராடினர்: அதிகாரிகள் கவலை

பிடிஐ

உத்தரகாண்டில் நடந்துவரும் கும்பமேளாவில் 3-வது சாஹி புனித நீராடுதலில் நேற்று ஒரே நாளில் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.

நாடு முழுவதும் கரோனா 2-வது அலை அச்சுறுத்தி வரும் நிலையில், அதுகுறித்து எந்தவிதமான கவலையும் இல்லாமல், தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாமல், முகக்கவசம், சமூக விலகலைப் பின்பற்றாமல் நீராடினார்.

உத்தரகாண்ட் அரசு பக்தர்களுக்கும், சாதுக்களுக்கும் இலவசமாக முகக்கவசத்தை வழங்கியபோதிலும் பெரும்பாலானோர் யாரும் அணியவில்லை. சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் நீராடியது அதிகாரிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்துவரும் நாட்களில் உத்தரகாண்டில் கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கவலை அடைந்துள்ளனர்.

சித்தரை முதல் நாள் நேற்று மேஷ் சங்கராந்தி மற்றும் பைஷகி ஆகியவற்றைக் குறிக்கும் நாளாக வடமாநிலங்களில் கருதப்படுகிறது. இந்த நாளில் நடக்கும் கும்பமேளாவில் புனித நீராடுதல் மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. இதையடுத்து, கும்பமேளாவில் 2-வது புனித சாஹி நீராடுதலுக்காக நேற்று லட்சக்கணக்கான மக்கள் ஹிரித்துவார், ரிஷிகேஷ் கங்கை நதிக்கரையில் திரண்டனர்.

இதற்கு முன் 2010-ம் ஆண்டு நடந்த கும்பமேளாவில், மேஷ சங்கராந்தி நாளில் புனித நீராடுதல் நிகழ்வுக்கு 1.60 கோடி பேர் ஹரித்துவாரில் பங்கேற்ற நிலையில் அதைவிட நேற்று குறைவுதான். பக்தர்களுக்கும், சாதுக்களுக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கரோனா பரிசோதனை செய்தனர்.

இதில் 500 மாதிரிகளுக்கு 20 மாதிரிகளில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சாதுக்களுக்கு கரோனா பரிசோதனை செய்ததில் 4 சதவீதம் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சாதுக்களை கரோனா பரிசோதனை செய்ய அதிகாரிகள் அழைத்தபோது பெரும்பாலானோர் வர மறுத்துவிட்டனர்.

போலீஸாரும், சுகாதாரத் துறையினரும் இலவசமாக முகக்கவசங்களை வழங்கியும் அதை அணிவதற்குப் பெரும்பாலான மக்களும், சாதுக்களும் மறுத்தனர். சமூக விலகலைக் கடைப்பிடிக்க போலீஸாரும், சுகாதாரத் துறையினரும் ஒலிபெருக்கியில் அறிவுறுத்தியபோதிலும் அந்த விதிகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டன.

இந்த சாஹி புனித நீராடாலுக்குச் சென்று வந்த மக்கள் மீண்டும் சொந்த மாநிலங்களுக்குச் செல்லும்போது கரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் உச்சபட்சமாக 1,953 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் டேராடூனில் 796 பேர், ஹரித்துவாரில் 525 பேர், நைனிடாலில் 205 பேர், உதம் சிங் நகரில் 118 பேர் பாதிக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT