நம் நாட்டில் இயற்கை ஏற்படுத்தும் சீரழிவுகளை ‘தேசிய பேரிடர்’ என்று மத்திய அரசு அறிவிக்க சட்டத்தில் இடமில்லை எனத் தெரியவந்துள்ளது. இந்த அதிர்ச்சித் தகவலை மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் ‘தி இந்து’விடம் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கன மழை மற்றும் வெள்ளப் பெருக்கால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உயிரிழப்பும் பெருமளவில் சேதமும் ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கை பேரிடரை தேசிய பேரிடர் என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் கடிதம் எழுதினார்.
இதே கோரிக்கையை நேற்று நாடாளுமன்ற மக்களவையில் அதிமுக சார்பில் அதன் மூத்த உறுப் பினரும் துணை சபாநாயகருமான எம்.தம்பிதுரை எழுப்பி பேசினார். இதை ஏற்று, தமிழக வெள்ள சேதத்தை தேசிய பேரிடர் என்று மத்திய அரசு அறிவிக்குமானால் பெரிய அளவில் பலன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் உள்ளது. ஆனால் தேசிய பேரிடர் சட்டம் 2005 ன்படி புயல், மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களை ‘தேசிய பேரிடர்’ என்று அறிவிக்க முற்றிலும் இடமில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் மத்திய உள்துறை அமைச்சக அதி காரிகள் கூறும்போது, “இயற்கை பேரிடரின்போது நிவாரணம் அளிக்க நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில பேரிடர் நிவாரண நிதி உள்ளது. இதற்கு அதிக நிதித் தேவை ஏற்படும்போது, மத்திய அரசிடம் உள்ள தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி யுதவி அளிக்கப்படும். ஆனால், இந்த இயற்கை பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்கவும், அதன் மூலமாக சிறப்பு நிதியுதவி அளிக்க வும் தேசிய பேரிடர் சட்டத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. என்றாலும் தேசிய பேரிடர் என்ற அறி விக்கப்படுமானால் அது அரசியல் நோக்கத்துக்கான வெறும் அறிவிப் பாகவே இருக்கும்” என்றனர்.
உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த 2013, ஜூன் மாதத்தில் ஏற் பட்ட வெள்ள சேதத்தை குறிப்பிட்டு, நாடாளுமன்ற மாநிலங்களவையில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த உறுப் பினர் நரேஷ் அகர்வால் அதே ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி கேள்வி எழுப்பினார். தேசிய பேரிடர் என்று அறிவிக்க மத்திய அரசு கடைபிடிக் கும் வழிமுறைகள் என்ன என்றும் அவர் கேட்டிருந்தார்.
அதற்கு உள்துறை இணை அமைச்சர் முல்லப்பள்ளி ராமச் சந்திரன் பதில் அளிக்கும்போது, “எந்தவொரு இயற்கை பேரிடரை யும் ‘தேசிய பேரிடர்’ என்று அறி விக்க சட்டத்தில் இடமில்லை. எனினும், மத்திய அரசின் கருத்துப் படி இயற்கை பேரிடராக நிர்ணயிக் கப்படும் வரைமுறை என்பது சீரழி வின் தாக்கம், நிவாரண உதவியின் அளவு, மாநில அரசுகளின் சமாளிக் கும் திறன், நிவாரணப் பணிகள் செய்வதற்கான மாற்று வழிமுறை கள் ஆகியவை ஆகும். இயற்கை பேரிடரின்போது நாம் முதலில் கவனிக்க வேண்டியது அதற்கான நிவாரணப் பணிகள் மட்டுமே. இந்த இயற்கை பேரிடர்களை ஒரு குறிப்பிட்ட வரைமுறைக் குள் உட்படுத்த முடியாது. எனினும், இத்தகைய இடர்களுக்கு தேசிய பேரிடர் நடவடிக்கை குழுவின் மூல மான உதவிகளுடன் கூடுதலாக, ஏற் கெனவே உள்ள விதிமுறைகளின் படி தேசிய பேரிடர் நிவாரண நிதி அளிக்கவும் பரிசீலிக்கப்படும். உத்தராகண்டில் ஏற்பட்ட பெரு மழை, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஆகியவற்றை பொறுத்தவரை அது இயற்கை பேரிடராக மத்திய அரசால் நிர்ணயிக்கப்படுகிறதே தவிர தேசிய பேரிடர் என அறிவிக்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கடந்த 2008-ல் நேபாளத்தில் கோசி நதியின் கரைகள் உடைந்ததால் பிஹாரில் ஏற்பட்ட வெள்ளச் சேதம், தேசியப் பேரிடராக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை அப்போது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெளியிட்டது. ஆனால் இந்த அறிவிப்புக்காக சிறப்பு நிதியுதவி எதுவும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.