மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா | கோப்புப்படம் 
இந்தியா

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு விதிகளை வகுப்பதில் மத்திய அரசு உறுதி: அமித் ஷா திட்டவட்டம்

நிஸ்துலா ஹெப்பர்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கான விதிகளை வகுப்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. கரோனா வைரஸ் பரவல் காரணமாகவே விதிகள் வகுப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'தி இந்து'வுக்கு (ஆங்கிலம்) அளித்த பேட்டியில் கூறியதாவது:

''மேற்கு வங்க சட்டப்பேரவை, குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியதன் காரணமாக விதிகளை வகுப்பதில் மத்திய அரசு தாமதம் செய்யவில்லை. விதிகளை வகுப்பதில் அரசு உறுதியாக உள்ளது. உண்மையில் நிலவரம் என்னவெனில், மற்ற நாடுகளின் எல்லையோரம் அமைந்துள்ள மாநிலங்களில் நீண்ட பணிகளைச் செய்ய வேண்டியிருக்கிறது.

அதிலும் கரோனா வைரஸ் காரணமாக சிஏஏ தொடர்பான பணிகளைச் செய்வது ஏற்புடையதாக இருக்காது என்பதால், விதிகளை வகுப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இப்போதுள்ள சூழலில் கரோனா வைரஸுக்கு எதிராகப் போராடுவதற்குதான் முன்னுரிமை''.

இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

இந்தியாவில் கரோனா 2-வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் தேர்தல் பேரணிகளும், பொதுக்கூட்டங்களும் நடத்துவது சரியா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அமித் ஷா பதில் அளிக்கையில், “சட்டப்பேரவையின் பதவிக் காலம் முடிந்துவிட்டால், தேர்தலைத் தள்ளி வைப்பதற்கான எந்த மாற்று அம்சமும் அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லை. அனைத்துக் கட்சிகளும் ஒன்றுசேர்ந்து வந்தால், தேர்தலைத் தள்ளிவைப்பது குறித்து ஆலோசிக்கலாம் அல்லது தேர்தல் நடக்கும் மாநிலங்களில் ஆளும் அரசுகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கலாம்.

ஆனால், தேர்தல் ஆணையத்துக்கு மாற்று வழிகள் ஏதும் இல்லை. தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான தேதிகளை அறிவித்தவுடன் அதற்குத் தயாராவதற்கு அரசியல் கட்சிகளுக்கும் குறைவான காலக்கெடுதான் இருந்தது” எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT