உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் | கோப்புப் படம். 
இந்தியா

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கரோனா தொற்றால் பாதிப்பு

பிடிஐ

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஆதித்யநாத் நேற்று ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில், “முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் சில முக்கிய அதிகாரிகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, நான் தனிமைப்படுத்திக் கொண்டேன். கரோனா பரிசோதனையும் செய்து கொண்டேன். அந்த முடிவுகள் வரும்வரை அதுவரை காணொலி மூலம் அனைத்துப் பணிகளையும் மேற்பார்வை செய்வேன்'' எனத் தெரிவித்தார்.

ஆனால், எந்தெந்த அதிகாரிகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது என்பது குறித்து ஆதித்யநாத் தெரிவிக்கவில்லை.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் ஆதித்யநாத் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். பாஜகவின் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவராக ஆதித்யநாத் இருந்தார். இதில் முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் முக்கிய அதிகாரி அபிஷேக் கவுசிக் என்பவருக்கு முதலில் தொற்று ஏற்பட்டுள்ளது. அதன்பின் படிப்படியாக அனைவருக்கும் கரோனா பரவியுள்ளது.

இந்நிலையில் முதல்வர் ஆதித்யநாத் இன்று ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில், “சில அறிகுறிகள் எனக்கு இருந்ததையடுத்து நான் கரோனா பரிசோதனை செய்தேன். அதில் நான் கரோனாவில் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. தற்போது நான் தனிமைப்படுத்திக் கொண்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்திலும் கரோனா 2-வது அலை தீவிரமடைந்துள்ளது. அங்கு நேற்று மட்டும் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் பரவல் காரணமாக நவராத்திரி, ரமலான் பண்டிகை கொண்டாட்டத்துக்கும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT