இந்தியா

அலகாபாத் மாக மேளாவின் பாதுகாப்பு பணியில் ஆளில்லா வேவு விமானங்கள் பயன்படுத்த முடிவு

ஆர்.ஷபிமுன்னா

உபியில் அலகாபாத்தில் இந்த வருடம் நடைபெறவிருக்கும் மாக மேளாவின் பாதுகாப்பு பணியில் ஆளில்லா வேவு விமானங்கள் நான்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒவ்வொரு வருட மேளாவிலும் அதிகமாகக் காணாமல் போவோரை எளிதாக கண்டுபிடித்து விட முடியும்.

உ.பி.யின் அலகாபாத்தில் கங்கை, யமுனை மற்றும் பூமிக்கு அடியில் ஓடுவதாக நம்பப்படும் சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகள் கலக்கும் சங்கமம் அமைந்துள்ளது. மிகவும் புண்ணிய தலமாகக் கருதப்படும் இதன் கரையில் ஒவ்வொரு வருடம் பிப்ரவரியில் வரும் மாசி மாதத்தில் மாக மேளா நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள வேண்டியும், கல்பவாசிகளாகத் தங்கி செல்லவும் நாடு முழுவதிலும் இருந்து பக்தர்களும், சாதுக்களும் வருவது உண்டு. இதன் ஜனநெரிசலில் வயதானவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் காணாமல் போவதும், பாதுகாப்புப் பிரச்சனைகள் ஏற்படுவதும் வழக்கமாக உள்ளது. உபி போலீஸாருக்கு சவாலாக உள்ள இந்த பிரச்சனையை சமாளிக்க இந்த வருடம் ஆளில்லா வேவு விமானங்கள் நான்கை பறக்க விட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் அலகாபாத்தின் காவல்துறை சிறப்புக் கண்காணிப்பாளரான கே.எஸ்.இமானுவேல் கூறுகையில், ‘மாக மேளாவில் எதிர்பார்க்கப்படும் லட்சக்கணக்கான்அ பக்தர்கள் மற்றும் கல்பவாசிகளின் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு இந்த வேவு விமானங்கள் பறக்க விடப்பட உள்ளன. இதன்மூலம், சந்தேகத்திற்கும் இடமளிக்கும் வகையில் உலவுபவர்களையும் முன்கூட்டியே

பிடித்து விசாரித்து அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும்.’ எனத் தெரிவித்தார்.

ஒவ்வொரு வருடமும் நடைபெறும் இந்த மாக மேளா ஜனவரி 14-ல் துவங்கி மார்ச் மாதம் வரை நடைபெறுகிறது. இதன் புண்ணியக் குளியல்களில் முக்கியக் நாளாக ஜனவரி 14-ன் மகர சங்ராந்தி, ஜனவரி 23-ன் பவுசு பூர்ணிமா, பிப்ரவரி8-ன் மவுனி அமாவாசை, பிப்ரவரி 12-ன் வசந்த பஞ்சமி, பிப்ரவரி 22-ன் மாக பூர்ணிமா மற்றும் மார்ச் 7–ன் மகாசிவராத்ரி ஆகிய நாட்கள் கருதப்படுகிறது. இந்த நாட்களில் குறிப்பாக அலகாபாத்தின் சங்கமத்தில் குளிக்க தமிழகம் உட்பட நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்

SCROLL FOR NEXT