மகாராஷ்டிராவில் நாள்தோறும் 50,000 முதல் 60,000 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுவருகிறது. கடந்த 5-ம் தேதி முதல் அந்த மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. வாரவிடுமுறை நாட்களில் முழு ஊரடங்கு அமல் செய்யப்படுகிறது.எனினும் வைரஸ் பரவல் குறையவில்லை.
இதுதொடர்பாக முதல்வர் உத்தவ தாக்கரே தலைமையில் நேற்று கரோனா தடுப்பு உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன்பிறகு முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியதாவது:
மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டைவிட கரோனா வைரஸ் அதிவேகமாக பரவுகிறது. வைரஸ்பரவலை தடுக்க பரிசோதனைகள்அதிகரிக்கப்பட்டுள்ளன. புதியகரோனா தொற்று, உயிரிழப்புகளை மறைக்கவில்லை. உண்மையான புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறோம்.
ஆக்ஸிஜன், மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசு, தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்த இக்கட்டான நேரத்தில் ராணுவத்தின் உதவி தேவைப்படுகிறது. ராணுவ விமானங்கள் மூலம் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை விநியோகம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி உதவி செய்ய வேண்டும்.
கரோனா தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. குறு, சிறு தொழில் நிறுவனங்களின் நலன்களை கருத்தில் கொண்டு ஜிஎஸ்டி வரிவிதிப்பு நடைமுறையில் மத்திய அரசு தளர்வுகளை அளிக்க வேண்டும்.
புதன்கிழமை இரவு 8 மணி முதல்15 நாட்களுக்கு 144 தடையுத்தரவு அமல் செய்யப்படுகிறது. இது ஊரடங்கு கிடையாது. எனினும் ஊரடங்குக்கு இணையான கட்டுப்பாடுகள் அமல் செய்யப்படும். இதை மக்கள் ஊரடங்காக மாற்ற வேண்டும். 15 நாட்களுக்கு காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை அத்தியாவசிய பணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும். மருத்துவம், வங்கிகள், ஊடகம், இணைய வணிகம், பெட்ரோல் நிலையங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் வழக்கம்போல தொடரும்.
மாநிலத்தின் 7 கோடி மக்களுக்கு 3 கிலோ கோதுமை, 2 கிலோஅரிசி இலவசமாக வழங்கப்படும். சிவா உணவு திட்டத்தின் மூலம் ஏழைகளுக்கு ஒரு மாதம் இலவசமாக உணவு வழங்கப்படும். சுகாதார கட்டமைப்புக்காக ரூ.3,300கோடி ஒதுக்கப்படுகிறது.
அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். கரோனா வைரஸுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராடுவோம்.
இவ்வாறு முதல்வர் உத்தவ தாக்கரே கூறினார்.