இந்தியா

பாஜக எம்.பி. கீர்த்தி அசாத் மீதான கட்சி நடவடிக்கை: அத்வானி, மூத்த தலைவர்கள் அவசர ஆலோசனை

பிடிஐ

டெல்லி கிரிக்கெட் சங்க ஊழலில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லிக்கு தொடர்பு இருப்பதாக கூறிய பாஜக எம்.பி. கீர்த்தி ஆசாத் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து கட்சியில் நிலவும் சூழல் தொடர்பாக பாஜக மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சாந்தகுமார், யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் நேற்று அவசர ஆலோசனை நடத்தினர்.

பாஜக தலைவராக அமித் ஷா பொறுப்பேற்ற பிறகு, அத்வானி, ஜோஷி, வாஜ்பாய், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரைக் கொண்ட வழிகாட்டும் குழுவை (மார்க்கதர்ஷக் மண்டல்) ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் கீர்த்தி ஆசாத், தான் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் வழி காட்டும் குழுவின் தலையீட்டை கோரியிருந்தார்.

இந்த நிலையில் டெல்லியில் முரளி மனோகர் ஜோஷியின் இல்லத்தில் ஜோஷி, அத்வானி, சாந்தகுமார், சின்ஹா ஆகிய 4 பேரும் நேற்று சுமார் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். இவர்கள் கீர்த்தி ஆசாத் இடைநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து கட்சியில் நிலவும் சூழல் குறித்து விவாதித் ததாக கூறப்படுகிறது.

கடந்த அக்டோபர் – நவம்பரில் நடந்த பிஹார் தேர்தலில் பாஜக தோல்விக்குப் பிறகு இந்த 4 தலைவர்களும் மோடி – அமித்ஷா அணிக்கு எதிராக குரல் எழுப்பினர். டெல்லி தேர்தல் முடிவில் இருந்து கட்சித் தலைமை பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றும் கடந்த ஓராண்டாக ஒரு சிலரின் கட்டுப்பாட்டில் கட்சி சிக்கியுள்ளதாகவும் இவர்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில் மூத்த தலைவர்களின் நேற்றைய ஆலோசனை முக்கியத்துவம் பெற் றுள்ளது. கடந்த முறை உடனே அறிக்கை வெளியிட்டது போல் இம்முறை, ஆலோசனை குறித்து விளக்கம் எதுவும் தரப்படவில்லை. கீர்த்தி ஆசாத் விவகாரத்தை உரிய இடத்தில் உரிய நேரத்தில் மூத்த தலைவர்கள் எழுப்புவார்கள் என்று அவர்களின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

கீர்த்தி ஆசாத் கோரிக்கை

இதனிடையே எம்.பி. கீர்த்தி ஆசாத் நேற்று அகமதாபாத்தில் செய்தியாளர்களிம் கூறும்போது, “கட்சியில் இருந்து நான் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறித்த நோட்டீஸ் வந்துள்ளது. அதில் காரணங்கள் எதுவும் குறிப் பிடப்படவில்லை. காரணங்களை கட்சி தெரிவித்தால் எனக்கு விளக்கம் அளிக்க உதவியாக இருக்கும். நான் விளக்கக் கடிதம் எழுதுவதில் கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி உதவுவதாக கூறியுள்ளார்.

டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் நடந்த ஊழலுக்கு எதிராகவே நான் போராடுகிறேன். தனிப்பட்ட எவருக்கும் எதிராக அல்ல. பிரதமர் மீது எனக்கு முழு நம் பிக்கை உள்ளது. பிரதமர் எனது கருத்தை அறிந்து எனக்கு நீதி வழங்குவார் என நம்புகிறேன். இந்த விவகாரத்தில் வழிகாட்டும் குழுவும் தலையிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

சுவாமி ஆதரவு

இந்நிலையில் கீர்த்தி ஆசாத் துக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி ஆதரவு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “கட்சிக்கு விளக்கம் அளிக்கும் கடிதம் எழுதுவதில் கீர்த்தி ஆசாத்துக்கு நான் உதவுவேன். சிறிய வயதில் இருந்தே அவரை நான் அறிவேன். அவரது தந்தை எனக்கு நெருங்கிய நண்பர். கீர்த்தி ஆசாத் இப்போதும் பாஜக உறுப்பினர்தான். அவருக்கு உதவுவதில் தவறில்லை. அவரை போன்ற நேர்மையான நபரை கட்சி இழக்கக் கூடாது” என்றார்.

SCROLL FOR NEXT