இந்தியா

மேற்குவங்கத்தில் பாஜக வலிமைமிகு அரசியல் சக்தியே; குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது: பிரசாந்த் கிஷோர்

செய்திப்பிரிவு

மேற்குவங்கத்தில் பாஜக வலிமைமிகு அரசியல் சக்தி; அதன் வீச்சை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது என தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுகவுக்கும், மேற்குவங்கத்தில் திரிணமூலுக்கும் அவர் தேர்தல் உத்தி வகுப்பாளராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், கடந்த வார இறுதியில் பத்திரிகையாளர்கள் சிலருடன் பிரசார்த் கிஷோர் கிளப் ஹவுஸ் எனும் சமூக வலைதள ஆப்பில் பத்திரிகையாளர்களுடன் நடத்திய உரையாடல் கசிந்தது.

அதில், மேற்குவங்கத் தேர்தலில் நிச்சயமாக பாஜகவுக்கு குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதம் கிடைக்கும் என அவர் பேசியிருந்தார். அவருடைய இந்த ஒற்றை வாக்கியத்தை மட்டும் வைத்துக் கொண்டு சமூகவலைதளங்களில் பாஜகவினர் பிரசாந்த் கிஷோரே பாஜக வெற்றியை உறுதி செய்துவிட்டார் என்ற தொனியில் கருத்துகளைப் பகிர்ந்தனர். இன்னும் சிலர் பிரசாந்த் கிஷோர் திரிணமூல் காங்கிரஸை வஞ்சித்துவிட்டார்; அவர் இன்னும் மோடியின் ஆதரவாளராகவே இருக்கிறார் என்று கூறிவருகின்றனர்.

இந்நிலையில், தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு பிரசாந்த் கிஷோர் பேட்டியளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில், "மேற்குவங்கத்தில் பாஜக வலிமைமிகு அரசியல் சக்தி; அதன் வீச்சை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. ஆனால், இந்தத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிதான் அங்கு ஆட்சியைப் பிடிக்கும். பாஜக 100 இடங்களைத் தாண்டாது. பொதுவெளியில் ஓர் உரையாடல் நடக்கிறது. அதை எப்படி கசிந்ததாகக் குற்றஞ்சாட்ட முடியும். என்னிடம் க்ளப் ஹவுஸ் உரையாடல் கசிந்ததாகக் கூறியவர்களிடம் நான், அப்படி நடந்தால்தான் என்னவென்றே கேட்டேன்.

நான் எனது எதிரியின் வலிமையைக் கண்டுகொண்டு, அதை சரியாகக் கணித்து புரிந்துகொள்கிறேன் என்றால் அதுவும் எனது தேர்தல் உத்தியின் ஒரு பகுதி என்று அர்த்தமாகுமே தவிர நான் அந்த எதிரணியின் விசிறி என்று பொருள்படாது. ஒரு தேர்தல் உத்தி வகுப்பாளராக எனது எதிரியைக் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பது எனது பலம்.

மேற்குவங்கத்தில் கள ஆய்வு மோடிக்கு ஆதரவு 40 சதவீதம் என்று தெரிந்தது. பாஜகவுக்கு கிடைக்கும் வாக்குகளுக்கு பிரதமர் மோடி மீதான அபிமானமே முக்கியக் காரணம், அதன் பின்னர் தலித் ஆதரவு, இந்தி பேசும் மக்களின் ஆதரவும் இடம்பிடிக்கிறது. இதன் அடிப்படையிலேயே நான் அந்தக் கருத்தைக் கூறினேன். 2015ல் ஐபேக் தொடங்கப்பட்டதில் இருந்தே நாங்கள் பாஜகவுக்கு எதிரான கட்சிகளுக்காகவே கொள்கை வகுத்துக் கொடுக்கிறோம். இந்தத் தேர்தலில் திரிணமூல் ஆட்சியைத் தக்கவைக்காவிட்டால் நான் எனது பணியிலிருந்தே விலகிக் கொள்கிறேன்.

நம் நாட்டின் பிரச்சினையே நாம் எல்லா விவாதங்களையும் ஆம், இல்லை என்ற இரண்டு வாய்ப்புகளுக்குள் மட்டுமே அடக்கிவிடுகிறோம். பாஜக வலிமையாக இருக்கிறது என்று நான் சொன்னது மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. பாஜக வலிமையாக இருந்தாலும் மேற்குவங்கத் தேர்தலில் அது தோல்வியை சந்திக்கும் என நான் கூறியது கருத்தில் கொள்ளப்படவில்லை.

வலிமையாக இருப்பதற்கும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளது. திரிணமூலின் அரசியல் சக்தி அளப்பரியது. அதன் வாங்குவங்கி 45%க்கும் மேலானது. அதனால் அக்கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும்.

திரிணமூலுக்கு எதிரான அலையை கணிக்க முற்பட்டபோது அது மிகமிகக் குறைவாகவே இருந்தது. அதுவும் குறிப்பிட்ட சில பிரமுகர்களைச் சார்ந்தே இருந்தது. மேற்குவங்கத்தில் இன்னமும் மம்தா பானர்ஜி மக்களின் அன்பை, மதிப்பை, நம்பிக்கையைப் பெற்ற தலைவராகவே இருக்கிறார். அதுவும் அவர் பெண்களின் அபிமானம் பெற்ற தலைவராக இருக்கிறார்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT