மேற்கு வங்கத்தில் உள்ள கூச் பெஹர் மாவட்டத்துக்குள் அடுத்த 72 மணிநேரத்துக்கு எந்த அரசியல் கட்சியினரும் வரக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதை விமர்சித்துள்ள திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேர்தல் நடத்தை விதிகள் என்பதற்கு பதிலாக மோடியின் தேர்தல் நடத்தை விதிகள் (Modi Code of Conduct) எனப் பெயரை மாற்றிக் கொள்ளுங்கள் என்று சாடியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் 4ம் கட்டத் தேர்தல் 44 தொகுதிகளுக்கு நேற்று நடந்தது. கூச்பெஹார் மாவட்டம், சித்லாகுச்சியில் உள்ள மாதாபங்கா பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பாஜகவினருக்கும், திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலைக் கட்டுப்படுத்தும் பணியில் போலீஸாரும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும் ஈடுபட்டிருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த மக்களில் ஒரு தரப்பினர் மத்தியப் படையினர் வைத்திருந்த துப்பாக்கிகளைப் பிடுங்கவும், அவர்களைத் தாக்கவும் முயன்றனர்.
இதனால், வேறு வழியின்றி தற்காப்புக்காக மத்தியப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 7 பேர் காயம் அடைந்தனர். இந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து வன்முறை நடந்த கூச்பெஹார் மாவட்டத்துக்குள் அனைத்து கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் நுழைய 72 மணி நேரம் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதவிர வரும் 17ம் தேதி நடைபெற உள்ள 5ம் கட்ட தேர்தலுக்கு 72 மணிநேரத்துக்கு முன்பாகவே பிரச்சாரத்தை முடிக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு்ளது. பொதுவாக தேர்தல் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 48 மணி நேரத்துக்கு முன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வரும். இந்தக் காலம் அமைதிக் காலம் என்று கூறப்படுகிறது. தற்போது இதனை 72 மணி நேரமாக உயர்த்தியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவுகளை திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார். ட்விட்டரில் அவர் பதிவிட்ட கருத்தில் “ தேர்தல் ஆணையம், தனது தேர்தல் நடத்தை விதிகள் என்ற பெயரை, மோடியின் தேர்தல் நடத்தை விதிகள் என்று மாற்றிக்கொள்ளட்டும். பாஜக அனைத்தையும் பயன்படுத்தலாம்.
ஆனால், என்னுடைய மக்கள் தங்கள் வலிகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளவதை இந்த உலகத்தில் யாரராலும் என்னைத் தடுக்க முடியாது. கூச்பெஹார் மாவட்டத்துக்கு சென்று என்னுடைய சகோதர, சகோதரிகளைச் சந்திக்க முடியாமல் 3 நாட்கள் தடை செய்யலாம், ஆனால் 4-வது நாள் நான் அங்கு செல்வேன். அதுமட்டுமல்லாமல் நான் கூச்பெஹார் சென்று பாதி்க்கப்பட்டவர்களைச் சந்தித்தபின் அங்கு பேரணி நடத்துவேன்” எனத் தெரிவித்துள்ளார்.