டெல்லியில் கரோனா வைரஸ் சூழல் மிகவும் மோசமாக இருக்கிறது. மக்கள் அவசரப்பணி ஏதும் இல்லாவிட்டால் வீட்டை விட்டு வெளியேவரக்கூடாது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1.52 லட்சம் பேர் புதிதாக கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் நேற்று மட்டும் புதிதாக 10 ஆயிரம் பேர் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்ஸ 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
டெல்லியில் கரோனா வரைஸ் சூழல் மிகவும் மோசமாக இருக்கிறது. புதிதாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேவையில்லாத பட்சத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். முகக்கவசம் அணிந்திருத்தல், சானிடைசர் பயன்படுத்துதல், சமூக விலகலைக் கடைபிடியுங்கள்.
மக்களை முடக்கும் வகையில் லாக்டவுன் கொண்டுவருவதற்கு நானோ, எனது அரசோ விரும்பவில்லை. கரோனா தொற்றைத் தடுக்க லாக்டவுன் தீர்வல்ல என்று நான் நம்புகிறேன். மருத்துவமனை செயல்முறை செயலிழிந்துபோகும்தான் லாக்டவுன் பயனிளிக்கும்.
தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் தீவிரமடைவதற்கு முன் மருத்துவமனைக்கு சென்றுவிடுங்கள். மருத்துவமனையில் படுக்கைகள் தேவையான அளவு இருக்கின்றன. கரோனாவை தடுக்க அனைத்துக் கட்சிகளும் இணைந்து செயலாற்ற வேண்டும், அரசியல் செய்வதற்கு இது சரியான நேரம் அல்ல.
மத்திய அரசிடம் நான் மீண்டும் கேட்பது, வயது வேறுபாட்டை நீக்குங்கள். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துங்கள். வீ்ட்டுக்கு வீடு சென்று தடுப்பூசி செலுத்த அரசு தயாராக இருக்கிறது. டெல்லியில் 65 சதவீதம் பேர் 45 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்தான்.
நாம் தடுப்பூசி செலுத்தும் வேகத்தைவிட, கரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. நாம் விரைந்து செயல்பட்டு கரோனா வைரஸைவிட, வேகமாக தடுப்பூசி செலுத்த வேண்டும்.
இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.