கர்நாடகாவில் போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி, 4-வது நாளாக நேற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பேருந்துகள் இயக்கப்படவில்லை. யுகாதி விடுமுறைக்கு ஊருக்கு செல்ல முடியாமல் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
கர்நாடக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 6-வது ஊதியக் குழு பரிந்துரையின்படி ஊதிய உயர்வு, அரசு ஊழியர்களாக நியமனம் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி 4-வது நாளாகநேற்றும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் 1.2 லட்சம் ஊழியர்கள் வேலைக்கு செல்லாததால் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இதன் காரணமாக யுகாதி விடுமுறைக்காக ஊருக்கு செல்வோர், பெங்களூரு, மைசூரு, ஹூப்ளி, மங்களூரு உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் மணிக் கணக்கில் காத்துக் கிடந்தனர். பெங்களூரு பல்கலைக்கழகம், மைசூரு பல்கலைக்கழகம் உள்ளிட்டவை கல்லூரி இறுதி தேர்வை ஒத்தி வைத்துள்ளன. வெளியூர் பயணிகள், பணிக்கு செல்வோர், மருத்துவமனைக்கு செல்வோர் என ஆயிரக்கணக்கானோர் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். இந்த சூழலை பயன்படுத்தி தனியார் பேருந்து, ஆட்டோ,கால் டாக்சி ஓட்டுநர்கள் ஆகியோர் கூடுதல் கட்டணம் வசூலித்தனர்.
ஒப்பந்த பணியாளர்கள், டாக்ஸிஓட்டுநர்கள் உள்ளிட்டோரை கொண்டு நேற்று மாலையில் 600 பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியதில் 10-க்கும் மேற்பட்ட பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்தன. பயணிகளின் வசதிக்காக தென்மேற்கு ரயில்வே சார்பில் 14 கூடுதல் ரயில்களும், பெங்களூரு மெட்ரோ சார்பில் சிறப்பு மெட்ரோ ரயில்களும் இயக்கப்பட்டன.
பணிக்கு திரும்புமாறு அதிகாரிகள் கொடுத்த நெருக்கடியின் காரணமாக போக்குவரத்து ஊழியர் சிவக்குமார் (40) தூக்கிட்டுதற்கொலை செய்துகொண்டார். மண்டியாவில் ரமேஷ்குமார் (37) தற்கொலைக்கு முயன்றார்.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறும்போது, “போக்குவரத்து ஊழியர்களின் 10 கோரிக்கைகளில் 8 கோரிக்கைகள் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ளன. மீண்டும் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை. ஊழியர்களுக்கு தொடர்பு இல்லாத சிலரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு தவறான வழியில் செல்கிறார்கள். ஊழியர்களின் வீண் பிடிவாதம் ஆபத்தில் முடியும்’’என்றார்.
பெலகாவி சென்ற போக்குவரத்து ஊழியர் சங்க கவுரவ தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகரை போலீஸார் நேற்று தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். இதற்கு ஊழியர்களும், இடதுசாரி தொழிற்சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.