பிரான்ஸின் தஸ்ஸோ நிறுவனத்திடம் இருந்து ரூ.59,000 கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2016-ம் ஆண்டில் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதுவரை 14 போர் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சுர்ஜேவாலா கூறியதாவது:
ரஃபேல் விமான ஒப்பந்தத்தை பெற இந்திய இடைத்தரகர் சுஷேன் குப்தாவுக்கு தஸ்ஸோ நிறுவனம் பெரும் தொகையை லஞ்சமாக வழங்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் பெருமளவு ஊழல் நடைபெற்றிருக்கிறது.
நாட்டின் மிகப்பெரிய ராணுவ ஒப்பந்தத்தில் ஒரு தனிநபர் எவ்வாறு ஆதிக்கம் செலுத்த முடியும்? இதுதொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு உண்மைகளை மூடி மறைக்கிறது. இனியும் மத்திய அரசு ஒளிந்து கொள்ள முடியாது. நாட்டு மக்களுக்கு பதில் அளித்தாக வேண்டும்.
ரஃபேல் ஒப்பந்தத்தில் இருந்து ஊழல் எதிர்ப்பு பிரிவுகளை நீக்கியது ஏன் என்பதற்கு மோடி அரசு பதில் அளிக்க வேண்டும். ரஃபேல் ஒப்பந்தத்தால் மத்திய அரசுக்கு ரூ.21,075 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார்.