நாடு முழுவதும் கரோனா 2-வது அலை தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனிடையே கடந்த ஆண்டைப் போல மீண்டும் முழுஊரடங்கு அமலுக்கு வந்தால் ரயில் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்தும் முடங்கிவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இதனால், வெளி மாநிலங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்கின்றனர். இதனால் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இதுகுறித்து ரயில்வே வாரியதலைவர் சுனீத் சர்மா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
ரயில் சேவைகளை முற்றிலும் நிறுத்தும் திட்டம் எதுவும் இல்லை.இதுபோல சேவைகளை குறைக்கும் திட்டமும் இல்லை. தேவைக்கேற்ப ரயில்கள் இயக்கப்படும். குறிப்பாக, பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதாக தகவல் கிடைத்தால் உடனடியாக ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரயில்களுக்கு பற்றாக்குறை எதுவும் இல்லை. அதேபோல, ரயில் பயணம் செய்வதற்கு கரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.மேலும் கோடை காலங்களில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பது வழக்கமானதுதான்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.