இந்தியா

பழம்பெரும் நடிகர் திலீப்குமாருக்கு பத்மவிபூஷண் விருது: ராஜ்நாத் சிங் நேரில் வழங்கினார்

பிடிஐ

பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகரான திலீப் குமாருக்கு நாட்டின் உயரிய பத்மவிபூஷண் விருதினை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று நேரில் வழங்கினார்.

பாலிவுட் திரையுலகின் பழம் பெரும் நடிகர்களான திலீப்குமார், அமிதாப் பச்சன் ஆகியோரை கவுரவிக்கும் வகையில் கடந்த குடியரசு தினத்தில் அவர்களுக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் குடியரசுத் தலைவர் மாளிகையில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. உடல் நலமின்மை காரணமாக திலீப் குமார் அந்நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. இந்நிலையில் அவருக்கு அறிவிக்கப்பட்ட பத்மவிபூஷண் விருதை நேரில் வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள திலீப் குமாரின் வீட்டுக்கு நேற்று நேரில் சென்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பத்மவிபூஷண் விருது மற்றும் பதக்கம் வழங்கி கவுரவித்தார். அப்போது திலீப் குமாரின் மனைவியும், பழம்பெரும் நடிகையுமான சாய்ரா பானுவும் உடனிருந்தார். மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் ஆகியோரும் பங்கேற்றனர்.

பாம்பே டாக்கீஸ் தயாரிப்பில் கடந்த 1944-ல் வெளியான ‘ஜ்வார் பாட்டா’ திரைப்படம் மூலம் பாலிவுட் திரையுலகில் அடியெடுத்து வைத்த திலீப் குமார் சுமார் 60 ஆண்டுகள் வரை எண்ணற்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தவர். ‘ஆஸாத்’, ‘முகலே ஆஸம்’, ‘ராம் அவுர் ஷ்யாம்’ ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ‘பாலிவுட்டின் சோக மன்னன்’ என்ற பட்டப்பெயர் அவருக்கு கிடைத்தது. கடைசியாக 1998-ல் வெளியான ‘கிலா’ என்ற திரைப்படத்தில் நடித்தார். திலீப் குமாரின் கலைச்சேவையை பாராட்டும் வகையில் பத்மவிபூஷண் விருது அளிக்கப்பட்டதற்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT