கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டநிலையில், முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டிக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதில் முதல்வர் பினராயி விஜயன் கடந்த மாதம் 3ம் தேதிதான் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் இருப்பினும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, முதல்வர் பினராயி விஜயன் சிகிச்சைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன், மருமகன் முகமது ரியாஸ் ஆகியோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொற்று உறுதி தெய்யப்பட்டது.
கேரள ஆளுநர் முகமது ஆரிஃப்கான் ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “ முதல்வர் பினராயி விஜயனிடம் தொலைப்பேசியில் பேசினேன். அவரின் உடல் நிலை சீராக இருக்கிறது. முதல்வரும், அவரின் குடும்ப உறுப்பினர்களும் விரைவில் நலம்பெற வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் தேவேகவுடா ஆகியோர் பினராயி விஜயன் விரைவில் குணமடைய வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
இதற்டையே கேரள முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான உம்மன் சாண்டியும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் புதுப்பள்ளி தொகுதியில் போட்டியிடும் உம்மன் சாண்டி, கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். இதையடுத்து, அவருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
உம்மன் சாண்டி, கோட்டயத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார் எனத் தகவல்கள் தெரிவி்க்கின்றன.