‘‘சீக்கியர்களின் குரு தேஜ் பகதூரின் வாழ்க்கை வரலாற்றை, இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.
சீக்கியர்களின் 10 குருமார்களில் 9-வது குருவாகப் போற்றப்படுபவர் குரு தேஜ் பகதூர். கடந்த 1665-ம் ஆண்டு முதல் 1675-ம் ஆண்டு வரை குரு தேஜ் பகதூர், சீக்கியர்களின் தலைவராக இருந்தார். 75-ம் ஆண்டு அவர் கொல்லப்பட்டார். குரு தேஜ் பகதூரை மதம் மாற சொல்லி அப்போது டெல்லியில் இருந்த மன்னர் வலியுறுத்தி உள்ளார். அதை ஏற்க மறுத்து தர்மம்தான் முக்கியம் என்று கூறியதால் குரு தேஜ் பகதூரை கொன்றதாக வரலாறு கூறுகிறது.
இந்நிலையில், இவருடைய 400-வது ஜெயந்தி விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடுவது குறித்து பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
குரு தேஜ் பகதூரின் வாழ்க்கை வரலாறு பற்றி நமக்கு தெரியும். ஆனால், அவருடைய வாழ்க்கையின் ஒவ்வொரு படிநிலைகளையும் நாட்டின் இளம் தலைமுறையினர் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். குரு தேஜ் பகதூரின் 400-வது ஜெயந்தி விழாவை மிகச் சிறப்பாக இந்தியா நடத்தும். அவருக்கு மிக தகுதியான சிறப்பினை அரசு செய்யும்.
இந்த விழாவை கொண்டாடுவது நமக்கு அதிர்ஷ்டம், நமது கடமை. நாட்டு மக்கள் அனைவருடனும் இணைந்து குரு தேஜ் பகதூரின் 400-வது ஜெயந்தியை உற்சாகமாக கொண்டாடுவோம். அது நமக்கு ஒரு ஆசிர்வாதமாக இருக்கும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
சிறப்பு அஞ்சல் தலை
கூட்டத்தில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் பேசும்போது, ‘‘பஞ்சாபில் குரு தேஜ் பகதூர் ஜெயந்தி விழாவை சிறப்பாக கொண்டாடுவது, ஸ்ரீஅனந்தபூர் சாஹிப்பை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவது உட்பட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த மாநில அரசுக்கு ரூ.937 கோடியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும். குரு தேஜ் பகதூரின் நினைவாக, சிறப்பு அஞ்சல் தலையை மத்திய அரசு வெளியிட வேண்டும். அவருடைய ஜெயந்தி விழாவை நாடு முழுவதும் நடத்த வேண்டும். வெளிநாடுகளிலும் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.