சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் கடந்த 3-ம் தேதி நக்சல்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சூழலில், அசாமைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் சிக்கா சர்மா என்பவர் பேஸ்புக் பக்கத்தில், “சம்பளம் வாங்கும் மக்கள், பணியின் போது உயிரிழந்தால் அவர்களை தியாகிகள் எனக் குறிப்பிடக் கூடாது. அப்படி பார்த்தால், மின்வாரிய ஊழியர்கள் தங்கள் பணியின் போது மின்சாரம் தாக்கி இறக்க நேரிட்டால், அவர்களையும் தியாகிகள் எனக் குறிப்பிடலாமா?” என கூறியிருந்தார்.
இதுதொடர்பாக பாஜக நிர்வாகிகள் சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில், எழுத்தாளர் சிக்கா சர்மாவை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர் மீது தேச துரோகம், அவதூறு பரப்புதல், அச்சுறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் தற்போது 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.