தற்போது நடந்துவரும் தேர்தலில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவோர் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருப்பதைக் கட்டாயமாக்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கக் கோரி மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மேற்கு வங்கத்தில் மட்டும் தேர்தல் நடந்து வருகிறது. நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை பரவிவரும் நிலையில் தேர்தல் பிரச்சாரத்துக்குச் செல்லும் அரசியல் தலைவர்கள் முகக்கவசம் அணிந்திருந்தாலும், பிரச்சாரத்துக்கு வரும் தொண்டர்கள், தலைவர்களுடன் வருவோர் முகக்கவசத்தை அணிவதில்லை.
பிரச்சாரத்தின்போது அரசியல் கட்சித் தலைவர்கள் முகக்கவசம் அணியுங்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தும் இன்னும் விழிப்புணர்வு வரவில்லை.
இதையடுத்து, உத்தரப் பிரதேச முன்னாள் டிஜிபி விக்ரம் சிங், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், ''நாட்டில் நடந்து வரும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல், இனிமேல் நடக்கும் தேர்தல்கள் அனைத்தையும் தேர்தல் பிரச்சாரம் செய்யும் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும். தேர்தல் ஆணையம் வகுத்துள்ள கோவிட் கட்டுப்பாடுகளை மீறும் வேட்பாளர்கள், தலைவர்களைப் பிரச்சாரம் செய்யத் தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்ந மனு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.என்.பாட்டீல், ஜஸ்மீத் சிங் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் விக்ரம் சிங் தரப்பில் வழக்கறிஞர் விராக் குப்தா ஆஜரானார்.
அவர் வாதிடுகையில், “தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரச்சாரத்தில் ஈடுபடுவோர் கண்டிப்பாக முகக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும். சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நாளேடுகள், டிஜிட்டல், தொலைக்காட்சி மூலம் விளம்பரம் செய்து விழிப்புணர்வூட்ட வேண்டும். அனைத்துத் தரப்பினரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்கும்போது, தேர்தல் பிரச்சாரத்தில் மட்டும் இந்த விதி ஏன் கடைப்பிடிக்கப்படவில்லை” எனத் தெரிவித்தார்.
இந்த மனுவுக்கு மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் பதில் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வரும் 30-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.