இந்தியா

ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து ப.சிதம்பரம், கார்த்திக்கு விலக்கு

செய்திப்பிரிவு

ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம்ஆகியோர் நேரில் ஆஜராவதிலிருந்து டெல்லி நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு, ஐஎன்எக்ஸ் மீடியா குழுமம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்டியது. இதற்கு வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்தது. இதில் முறைகேடு நடந்ததாக புகார்எழுந்தது. இதையடுத்து, அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனர் பீட்டர் முகர்ஜி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக கடந்த2017-ம் ஆண்டு சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு ப.சிதம்பரம், கார்த்திக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. தமிழ்நாடு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரி இருவரும் மனு தாக்கல் செய்தனர்.

இதைப் பரிசீலித்த நீதிபதி எம்.கே.நாக்பால், இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக நேற்று அறிவித்தார். மேலும் இந்த வழக்கைவரும் 16-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

SCROLL FOR NEXT