கடந்த ஆண்டைவிட கரோனா 2-வது அலையில் தொற்று வேகமாகப் பரவுகிறது. இளைஞர்கள் அதிகமான அளவில் பாதிக்கப்படுகிறார்கள் என டெல்லி லோக்நாயக் மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் சுரேஷ் குமார் தெரிவித்தார்.
2-வது அலையில் நோய்ப் பரவலின் வேகம் அதிகமாக இருக்கிறது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் பாதிப்பும் அதிகரித்து வருவதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
நோய்ப் பரவல் தொடங்கியதிலிருந்து புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 736 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு ஒரு கோடியே 28 லட்சத்து ஆயிரத்து 785 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 3 நாட்களில் 2-வது முறையாக பாதிப்பு ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.
இந்நிலையில் டெல்லி லோக்நாயக் மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் சுரேஷ் குமார் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''கரோனா 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. கடந்த வாரம் 20 நோயாளிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று 170 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நோயாளிகளுக்கான படுக்கை தேவையும் அதிகரித்து வருகிறது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட அலையில் முதியோர்தான் அதிகமாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு பாதிப்பு அதிகம். ஆனால், கரோனா தடுப்பூசி வந்தபின், முதியோருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டதால், அவர்கள் பாதிக்கப்படுவது குறைந்துள்ளது.
அதேநேரம், 2-வது அலையில் இளைஞர்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் கரோனாவில் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. டெல்லியில் எங்கள் மருத்துவமனையில் தற்போது படுக்கை வசதிகளை அதிகப்படுத்தியுள்ளோம்.
நாம் குறிப்பிட்ட அளவு மக்களுக்கு விரைவாகத் தடுப்பூசி செலுத்திவிட்டால், மந்தைத் தடுப்பாற்றல் உருவாகும். கரோனா பரவல் சங்கிலி துண்டிக்கப்படும். தற்போது நாள்தோறும் மருத்துவமனையில் 1,200 பேருக்குத் தடுப்பூசி செலுத்துகிறோம்.
மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டதால், அவர்களுக்கு இடையே பாதிப்பு ஏற்படுவது பெருமளவு குறைந்துவிட்டது.
கரோனா வைரஸ் பரவல் திடீரென அதிகரிப்புக்கு மனிதர்களின் பழக்கமே காரணம். ரயில் நிலையங்கள், மார்க்கெட் போன்ற பகுதிகளில் மக்கள் முகக்கவசம் இன்றி அதிக அளவு கூடுதல் முக்கியக் காரணம். பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா நாடுகளில் உருவாகிய மரபணு மாற்றம் கண்ட கரோனா வைரஸ் இந்தியாவில் பரவியதே வேகமாக தொற்று அதிகரிக்கக் காரணம்''.
இவ்வாறு சுரேஷ் குமார் தெரிவித்தார்.