பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்: கோப்புப் படம். 
இந்தியா

அச்சுறுத்தும் கரோனா: பஞ்சாப் முழுவதும் இரவு நேர ஊரடங்கு; அரசியல் கூட்டத்துக்குத் தடை: முதல்வர் அமரிந்தர் சிங் அதிரடி

பிடிஐ

பஞ்சாப் மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து கரோனா வைரஸால் மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கை வரும் 30-ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் அமரிந்தர் சிங் இன்று உத்தரவிட்டுள்ளார்.

அதே நேரம், அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறிக் கூட்டம் நடத்தினால், அரசியல் தலைவர்கள் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமரிந்தர் சிங் எச்சரித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. பஞ்சாப் மாநிலத்திலும் நாள்தோறும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்த மாநிலத்தில் புதிதாக 2,905 பேர் பாதிக்கப்பட்டனர், 61 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 2.57 லட்சமாகவும், உயிரிழப்பு 7,216 ஆகவும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் முதலில் 12 மாவட்டங்களுக்கு மட்டுமே இரவு நேர ஊரடங்கு பிறப்பித்த நிலையில் இன்று இரவு முதல் மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு வரும் 30-ம் தேதி முதல் நீட்டிக்கப்படுவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.

முதல்வர் அமரிந்தர் சிங் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

''நாட்டில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த வேண்டியுள்ளது. 12 மாவட்டங்களுக்கு மட்டும் பிறப்பிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கு அதாவது இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரையிலான ஊரடங்கு, மாநிலம் முழுவதும் இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் நடத்தி மக்களைத் திரட்ட தடை விதிக்கப்படுகிறது. அதை மீறுவோர் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். சில அரசியல் கட்சித் தலைவர்களின் நடத்தை எனக்கு வியப்பாக இருக்கிறது. குறிப்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பாதல் ஆகியோர் மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் பொதுக்கூட்டம் நடத்துகிறார்கள். இதுபோன்ற பொறுப்பற்ற செயலில் ஈடுபடுகிறார்கள். இதுபோன்ற மூத்த அரசியல் தலைவர்களே மக்களின் உடல்நலனில் பொறுப்பின்றி இருந்தால், மக்கள் எவ்வாறு இருப்பார்கள்?

இரவு நேர ஊரடங்கைத் தீவிரமாக அமல்படுத்துமாறு காவல் டிஜிபி திங்கர் குப்தாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்போர் உள்ளரங்கில் 50 பேரும் ஊர்வலமாக 100 பேர் வரை செல்லலாம்.

அரசு ஊழியர்கள் அலுவலகங்களில் பணிபுரியும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள் வரும் 30-ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். ஷாப்பிங் மால்களில் ஒரு கடையில் ஒரே நேரத்தில் 10 பேருக்கு மேல் நிற்கக் கூடாது. ஷாப்பிங் மாலில் ஒரே நேரத்தில் 200 பேருக்கு மேல் செல்லக்கூடாது.

பஞ்சாப் மாநிலத்தில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பது வேதனையளிக்கிறது. பாதிப்புகளில் 85 சதவீதம் பிரிட்டனின் உருமாறிய கரோனாவாக இருக்கிறது. இதனால் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதைத் தவிர வேறு வழியில்லை. கரோனா விதிகளை, கட்டுப்பாடுகளை மீறும் மக்கள், அரசியல் தலைவர்கள், அமைப்புகள் மீது மாவட்டநிர்வாகம் கடும் நடவடிக்கையும் வழக்குப் பதிவும் செய்ய வேண்டும்''.

இவ்வாறு அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT