மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் ஒவ்வொருவரையும் எதிர்க்கும் ஒரே பெண்ணாக மம்தா பானர்ஜி என உத்தரப்பிரதேச சமாஜ்வாதி கட்சியின் எம்.பி.யான ஜெயா பச்சன் பிரச்சாரத்தின் போது பாராட்டி வருகிறார்.
இன்னும் ஐந்துகட்ட தேர்தல் நடைபெறவிருக்கும் மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவாக சமாஜ்வாதி எம்.பின ஜெயா பச்சன் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறார். பாலிவுட் பட உலகின் நடிகையான அவர் கடந்த நான்கு நாட்களாக மேற்கு வங்கத்தின் பல பிரச்சாரங்களில், முதல்வர் மம்தாவை பாராட்டியும் பேசி வருகிறார்.
இது குறித்து தனது மேடைகளில் ஜெயா பச்சன் பேசும்போது கூறியதாவது:
வங்க மக்களின் மதம் மற்றும் ஜனநாயக உரிமைகளை பாஜகவால் பறிக்க முடியாது. இதுபோன்ற மோசமான கொடுமைகளை தனி ஒரு பெண்ணாக நின்று ஒவ்வொருவரையும் சமாளித்து வருகிறார் மம்தா பானர்ஜி. இதற்காக அவர் மீது எனக்கு ஒரு தனி அபிமானம் உண்டு.
மம்தாவை இந்துக்களின் விரோதி என சித்தரிக்கும் பாஜக, அவரை பேகம் எனவும் பாகிஸ்தானை சேர்ந்தவராகவும் புகார் கூறுவது எடுபடாது. அவரது ஒரு காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. ஆனால், மம்தாவின் மனதில் எந்த முறிவும் இல்லை.
எனவே, அவர் இங்கு தனிப்பெண்ணாக இருந்து அனைவரையும் சமாளிக்கிறார். இதில் யாரும் அவரை தடுத்து நிறுத்த முடியாது.
இவ்வாறு அவர தெரிவித்தார்.
உ.பி.யின் ஆட்சி செய்த சமாஜ்வாதி கட்சியின் சார்பில் 2004 முதல் தொடர்ந்து நான்காவது முறையாக மாநிலங்களவை எம்.பி.யாகத் தொடர்பவர் ஜெயாபச்சன். பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனின் மனைவியான இவரது பூர்வீகம் மேற்கு வங்கம் ஆகும்.
இம்மாநிலத்தின் வங்க மொழியில் நன்கு பேசக்கூடியவர். மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் தமது ஆதரவை அளித்த சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்சிங் யாதவ், அதற்காக ஜெயாபச்சனை அனுப்பி வைத்துள்ளார்.
தேர்தலுக்கு சற்று முன்பாக, பாஜகவில் இணைந்த பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியை சமாளிக்க ஜெயா பச்சன் களம் இறக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. இதற்கு முன்பான தேர்தல்களில் மிதுன், திரிணமூல் காங்கிரஸின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் ஆவார்.