இந்தியா

ஒரே நாளில் 1.15 லட்சம் பேருக்குக் கரோனா; அடுத்த 4 வாரங்களுக்கு அதிக கவனத்துடன் இருங்கள்- மத்திய அரசு

ஏஎன்ஐ

நாடு முழுவதும் கரோனா தொற்று அன்றாடம் அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1.15 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், அடுத்த 4 வாரங்கள் மிகவும் முக்கியமானது என்றும் பொதுமக்கள் கரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்ள அரசுடன் கைகோத்து பங்களிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த மூன்று நாட்களில் இரண்டாவது முறையாக அன்றாட தொற்று பாதிப்பு 1 லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 1,03,558 பேருக்கு தொற்று உறுதியானது. தொடர்ந்து, நேற்று செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக 1.07 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது, கைகளை சுத்தமாகப் பேணுதல் போன்ற பழக்கவழக்கங்களுக்கு விடைகொடுத்துவிட்டனர். இதனாலேயே 11 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. மக்களின் தற்காப்பு நடவடிக்கையை நான் சமூக தடுப்பூசி என்றழைக்கிறேன். அதை மக்கள் தவறாமல் கடைபிடிப்பதோடு தகுதியானவர்கள் தடுப்பூசியையும் செலுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த 4 வாரங்களுக்கு உஷார்:

கரோனா இரண்டாம் அலையை எதிர்கொள்வதில் அடுத்த 4 வாரங்கள் மிக முக்கியமானது என நிதிஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். அடுத்த 4 வாரங்கள் மிகவும் முக்கியமானது என்றும் பொதுமக்கள் கரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்ள அரசுடன் கைகோத்து பங்களிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். சமீப நாட்களாக தொற்று எண்ணிக்கையைப் போல் கரோனா பலி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். இருப்பினும், ஒரு மில்லியன் மக்கள் தொகையில் கரோனா பலி வீதத்தை கணக்கிடும்போது அது தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருப்பதாகவும் அவர் கூறினார்.

18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி..

இதற்கிடையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். இதனை 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் என்ற நிலைக்கு மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்து வருவதால் அது குறித்து அரசும் பரிசீலிப்பதாகத் தெரிகிறது.

கடந்த 24 மணி நேர நிலவரம்:

புதிதாக 1,15,736 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 59,856 பேர் குணமடைந்தனர். ஒரே நாளில் 630 பேர் பலியாகினர்.

மொத்த பாதிப்பு: 1,28,01,785
குணமடைந்தோர்: 1,17,92,135
சிகிச்சையில் இருப்போர்: 8,43,473
இறப்பு எண்ணிக்கை: 1,66,177
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை: 8,70,77,474

SCROLL FOR NEXT