மேற்கு வங்க மாநிலம் கூச்பெஹார் மாவட்டம் குமனார் ஹாட் நகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பங்கேற்றார்.படம்: பிடிஐ 
இந்தியா

டிஎம்சி வேட்பாளர்கள் மீது பாஜகவினர் தாக்குதல்: மேற்கு வங்க முதல்வர் மம்தா குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 3 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், 4-ம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள அலிபுர்துவார் மாவட்டம் கல்சினியில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பேசியதாவது:

இன்று (நேற்று) தேர்தல் நடைபெறும் ஆரம்பாக் தொகுதியில் போட்டியிடும் திரிணமூல் வேட்பாளர் சுஜாதா, ஒரு வாக்குப் பதிவு மையத்துக்கு சென்ற போது அவர் மீது பாஜகவினர் கடுமையாக தாக்குதல் நடத்தி உள்ளனர். இதுபோல கனகுல் தொகுதி வேட்பாளரையும் தாக்கி உள்ளனர். கன்னிங் கிழக்கு தொகுதியில் எங்கள் வேட்பாளர் ஷவுகத் மொல்லாவை பாதுகாப்பு படையினர் தடுத்துள்ளனர்.

இதுபோல எங்கள் கட்சியின் மேலும் சில வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதுவரை இதுபோன்ற சுமார் 100 புகார்கள் எனக்கு வந்தன. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.

பாஜகவினரின் தேர்தல் பிரச்சாரங்களில் போதுமான கூட்டம் கூடாததால் விரக்தியடைந்த அதன்தலைவர்கள், டெல்லியிலிருந்தபடி எங்கள் கட்சியினர் மீது வன்முறையை ஏவி விடுகின்றனர். வாக்குப்பதிவு மையங்கள் கைப்பற்றப்பட்டால் அதைத் தடுக்கக் கூடாது என பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

தேர்தல் தொடங்கி இதுவரை எங்கள் கட்சியைச் சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் எந்த நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் இதுபோன்ற செயலால் எங்களை அச்சுறுத்த முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

          
SCROLL FOR NEXT