இந்தியா

64 ஆண்டுகளாக கூட்டணி ஆட்சி நடத்தும் கேரளம்: சிறு கட்சிகளின் குரலுக்கு வலுசேர்க்க கடவுளின் தேசம் காட்டும் பாதை

என்.சுவாமிநாதன்

கேரள மாநிலத்தில் கடந்த 64 ஆண்டுகளாகவே கூட்டணி ஆட்சியே நடந்து வருகிறது. இங்கு தனிப்பெரும்பான்மை பெறும் இலக்குடன் கட்சிகள் தேர்தலை அணுகுவது இல்லை. கூட்டணியில் அங்கும் வகிக்கும் கட்சிகளின் உணர்வுகளுக்கும் மரியாதை கொடுத்து அவர்களும் அமைச்சரவையில் இடம்பெறும் அளவுக்கு சீட் ஒதுக்கீட்டில் தாராளம் காட்டுவது வியப்படைய வைக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை கூட்டணி ஆட்சி என்பது எட்டாக் கனியாக உள்ளது. தமிழகத்தில் கடந்த 2006-ல்அமைந்த திமுக ஆட்சி, காங்கிரஸ் ஆதரவுடன்தான் நடந்தது. இருந்தும்காங்கிரஸ் கட்சிக்கு திமுக தனது அமைச்சரவையை பகிர்ந்துகொள்ளவில்லை. மைனாரிட்டி அரசு என வார்த்தைக்கு வார்த்தை வாள் சுழற்றினார் அப்போதைய எதிர்கட்சித் தலைவர் ஜெயலலிதா. கடந்த 2016 தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறும் இலக்குடன் அதிக தொகுதிகளில் போட்டியிடும் வழக்கத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அது இந்தத் தேர்தலிலும் எதிரொலிக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணி விஷயத்தில் குறைவான தொகுதிகளை ஒதுக்கியது அந்தக் கட்சியினர் வட்டாரத்தில் கடுமையான மனவருத்தத்தை ஏற்படுத்தியது. சீட் விஷயத்தில் உடன்பாடு ஏற்படாததால் தான் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் வெளியேறின. ஆனால் கேரளத்தில் தனித்து ஆட்சி எனும் சித்தாந்தமே இல்லை. சீட் ஒதுக்கீட்டிலும் தாராளம் காட்டுகிறார்கள்.

சுயேச்சைகளுக்கு மரியாதை!

1957-ம் ஆண்டு கேரளத்தில் நம்பூதிபாட் அரசு அமைந்தது. மக்கள் வாக்களித்து தேர்வு செய்த முதல் இடதுசாரி அரசும் இதுதான். 11 அமைச்சர்கள் கொண்ட இதன் அமைச்சரவையில் 2 சுயேச்சைகளுக்கும் இடம் அளிக்கப்பட்டது. அதில் கிருஷ்ணய்யருக்கு சட்டம், மின்சாரம், பாசனத் துறையும், மேனனுக்கு சுகாதாரத் துறையும் ஒதுக்கப்பட்டது. 1960 முதல் 1962 வரை கேரளத்தை பட்டம் தாணு பிள்ளை ஆட்சி செய்தார். பிரஜா சோசலிஸ்ட் கட்சியை சேர்ந்த அவர் உள்ளிட்ட மூன்று பேரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எட்டு பேரும் அப்போது அமைச்சரவையில் இருந்தனர்.

1967-ல் மீண்டும் இடதுசாரிகள் வெற்றிபெற, நம்பூதிரிபாட் தலைமையில் ஆட்சி அமைந்தது. இதில் கேரளசோசலிஸ்ட் கட்சியை நிறுவிய மதைமஞ்சூரன் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினரும் அமைச்சரவையில் இடம் பெற்றனர்.1969 முதல் 1970 வரை மிகக்குறுகிய காலமே இருந்த அச்சுதமேனனின் அமைச்சரவையிலும் சோசலிஸ்ட் கட்சியின் ஷேசன் உள்ளிட்ட கூட்டணிக்கட்சியினர் இடம் பெற்றனர். 1977-ல்அமைந்த கருணாகரனின் அமைச்சரவையிலும் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் பங்கஜாக்சான் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் இடம்பெற்றனர்.

துணை முதல்வர் வாய்ப்பு

1980-ல் முதன் முதலாக மார்க்சிஸ்ட் கட்சியின் ஈ.கே.நாயனார் ஆட்சி அமைந்தது. அதில், வழக்கம்போல் இந்தியகம்யூனிஸ்ட் இடம்பெற்றது. அப்போதுகேரள காங்கிரஸ் (ஏ பிரிவு) மார்க்சிஸ்ட் கூட்டணியில் இருந்தது. அதில் வெற்றிபெற்ற பி.சி.சாக்கோ உள்ளிட்ட சிலர்இந்த அமைச்சரவையில் இடம்பிடித்தனர். 1982 முதல் 1987 வரையிலான காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கருணாகரன் ஆட்சி அமைத்தார். அவரது அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த அவுகதர் குட்டிநாகா, முகமது கொயா என்ற இருவருக்கு துணைமுதல்வர் வாய்ப்பு வழங்கப்பட்டது.

1987 முதல் 1991 வரை மீண்டும்ஈ.கே.நாயனார் வென்றார். அதிலும்,கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டது. வழக்கம்போல் இந்திய கம்யூனிஸ்ட் இந்த அமைச்சரவையில் இடம் பிடித்தது. ஜனதா தளத்தை சேர்ந்த ஜோசப் வனத்துறை அமைச்சர் ஆனார். 1991-ல் காங்கிரஸ் வெற்றிபெற்று கருணாகரன் மீண்டும் முதல்வரானார். மொத்தம் 18 அமைச்சர்களைக் கொண்ட இவரது அமைச்சரவையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் குஞ்ஞாலிக்குட்டி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் இடம் பெற்றனர். 1996-ல் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது மார்க்சிஸ்ட் கட்சி. இதில் ஈ.கே.நாயனார் தலைமையில் ஆட்சி அமைந்தது. இவரது அமைச்சரவையில் இப்போதைய கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மின்சாரத்துறை வழங்கப்பட்டது. மொத்தமுள்ள 140 இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சி 40 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 18 இடங்களிலும் வென்றிருந்தன. கூட்டணியில் இருந்த பிற கட்சிகளுக்கும் சீட் கொடுத்து கூட்டணி ஆட்சியே அப்போதும் நடந்தது.

2001-ல் காங்கிரஸ் வெல்ல, ஏ.கே.அந்தோனி முதல்வர் ஆனார். அவரது அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்துவந்து ஜனாதிபத்ய சம்ரக்ஷன ஷமிதி என்ற தனிக்கட்சியைத் தொடங்கி காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற கவுரியம்மாளுக்கு விவசாய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 2006-ல் அச்சுதானந்தன் தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சி அமைத்தது. அதிலும் கூட்டணி அமைச்சரவையே அமைந்தது.

2011-ல் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது. உம்மன் சாண்டி கேரள முதல்வர் ஆனார். அவரது அமைச்சரவையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,கேரள காங்கிரஸ் (எம்) ஆகிய கூட்டணி கட்சிகள் இடம்பிடித்தன. 2016-ல்மார்க்சிஸ்ட் கட்சி வென்று பினராயி விஜயன் முதல்வர் ஆனார். இவரதுஅமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் (எஸ்), ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் இடம்பிடித்தன.

முன்மாதிரி கேரளம்

இன்று தேர்தலை சந்திக்கும் கேரளத்தில் அடுத்து அமைய இருப்பதும் கூட்டணி ஆட்சிதான் என்பதில் சந்தேகம் இல்லை. காரணம், தனிப் பெரும்பான்மையில் ஆட்சியமைக்கும் நோக்கத்துடன் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் இங்கு தேர்தலையே அணுகுவதில்லை. கேரளத்தில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் காங்கிரஸ் 91 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் 83 தொகுதிகளிலும் மட்டுமே களம் காண்கின்றன. மற்ற தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளன. கேரளத்தில் தனித்து ஆட்சி அமைக்க 71 சீட்கள் தேவை என்றபோதும் 100 சீட் அளவுக்குக் கூட பிரதான கட்சிகள் போட்டியிடவில்லை. அதேநேரம் பாஜகவுக்கு வலுவான கூட்டணி இல்லாததால் அந்தக் கட்சி 115 தொகுதிகளில் களம் காண்கிறது.

கேரளத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் என யார் ஆட்சி அமைத்தாலும் ஒரே அணியாக தேர்தலை சந்தித்து கூட்டணிக் கட்சிகளின் குரலுக்கும் வலுசேர்க்கின்றன. அந்தவகையில் இது சிறப்பான முன்னுதாரணம்தான்!

SCROLL FOR NEXT