இந்தியா

3-ம் கட்டத் தேர்தல்: மேற்குவங்கத்தில் 77.68%  - அசாமில்  80.32% வாக்குப்பதிவு; 6 மணி நிலவரம்

செய்திப்பிரிவு

மேற்குவங்கத்தில் மாலை 6 மணி நிலவரப்படி சுமாராக 77.68 சதவீத வாக்குகளும், அசாமில் 80.32 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கு ஏற்கெனவே 2 கட்டத் தேர்தல்கள் கடந்த மார்ச் 27 மற்றும் ஏப்ரல் 1ம் தேதி நடந்தமுடிந்துவிட்டன. இந்நிலையில், இறுதிக்கட்டமாக 40 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்தது. இதில், 337 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

சமீபத்தில் சர்ச்சையாகப் பேசி தேர்தல் ஆணையத்தின் தண்டனையைப் பெற்ற பாஜக அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வாஸ்சர்மா, மாநில பாஜக தலைவர் ரன்ஜீத் குமார் தாஸ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் களத்தில் உள்ளனர்.

இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதும், பல்வேறு வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க வந்த மூத்த குடிமக்கள், மற்றும் முதல் வாக்காளருக்கு பாரம்பரிய துண்டு அணிவித்து தேர்தல் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

பெரும்பாலும் அமைதியாக வாக்குப்பதிவு முடிந்தது. அசாமில் மாலை 6 மணி நிலவரப்படி சுமாராக 80.32 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கு ஏற்கெனவே 2 கட்டங்களாக கடந்த மார்ச் 27 மற்றும் கடந் 1-ம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. 3-வது கட்டமாக 31 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்தது.

தெற்கு 24 பர்கானா, ஹவுரா, ஹூக்ளி ஆகிய மாவட்டங்களில் கடும் பாதுகாப்புடன், தீவிரமான கரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

மேற்குவங்கத்தில் மாலை 6 மணி நிலவரப்படி சுமாராக 77.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முழுமையான விவரம் 7 மணிக்கு பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு மாநிலங்களிலும் வாக்களர்கள் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி வாக்களிக்கவும், சமூகவிலகலைக் கடைபிடிக்கவும் வலியுறுத்தப்பட்டனர். வாக்காளர்கள் அனைவரும் முகக்கவசம் அணியவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. இதனால் வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து வாக்களித்தனர்.

தேர்தலில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க பாதுகாப்புபடையினர் குவிக்கப்பட்டு இருந்தனர். பதற்றமான வாக்குச்சாவடி அமைந்திருக்கும் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

SCROLL FOR NEXT