கேரளாவில் பிற்பகல் 2 மணி நிலவரப்படி 52.41 சதவீதம் வாக்குகள் பதிவாகின. ஏறக்குறைய 2.74 கோடி மக்கள் பிற்பகலுக்குள் ஆர்வத்துடன், நீண்ட வரிசையில் நின்று வாக்கைச் செலுத்தினர்.
கேரளாவில் 140 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடக்கிறது. காலை வாக்குப்பதிவு தொடங்கியதிலிருந்து மக்கள் ஆர்வத்துடன், நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
காலை 9 மணி நிலவரப்படி 16.07 சதவீதம் வாக்குகள் பதிவாயின. பிற்பகல் 2 மணிக்குள் கேரளாவில் 52.41 சதவீதம் வாக்குகள் பதிவாயின. பெண்களில் 50.63 சதவீதம் பேரும், ஆண்களில் 52.31 சதவீதம் பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 23 சதவீதம் பேரும் வாக்களித்தனர். ஏறக்குறைய 2.74 கோடி மக்கள் பிற்பகலுக்குள் ஆர்வத்துடன், நீண்ட வரிசையில் நின்று வாக்கைச் செலுத்தினர்.
குறிப்பாக தர்மடம், அரூர், சேர்த்தலா, வடக்கன்சேரி, கருநாகப்பள்ளி தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. மற்ற தொகுதிகளை விட இங்கு வாக்கு சதவீதம் அதிகரித்தது.
நண்பகலுக்குள் வந்து முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன், மெட்ரோ மேன் ஸ்ரீதரன் ஆகியோர் தங்கள் வாக்கைப் பதிவு செய்தனர்.
கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பையனூர் தொகுதியில் தேர்தல் அதிகாரி முகமது அஷ்ரப் காலத்தில் என்பதை மார்க்சிஸ்ட் தொண்டர்கள் தாக்கியதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சிறிது நேரம் தேர்தல் நிறுத்தப்பட்டு, புதிய அதிகாரி நியமிக்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது.
அரன்முலா பகுதியில் வாக்களிக்க நின்றிருந்த ஒருவர் திடீரென நிலைகுலைந்து விழுந்து இறந்தார். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் இவிஎம் இயந்திரங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்தன.
கண்ணூரில் உள்ள அந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அதுல் ரஷீத்தை மார்க்சிஸ்ட் தொண்டர்கள் தாக்கிய சம்பவம் நடந்தது.