தெலங்கானா மாநிலம் வாரங்கல் தொகுதி முன்னாள் எம்.பி. ராஜய்யாவின் மருமகள், 3 பேரன்கள் மர்மமான முறையில் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, போலீஸார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத் தொடர்ந்து முன்னாள் எம்.பி. ராஜய்யா, அவரது மனைவி, மகன் ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
தெலங்கானா மாநிலம், வாரங்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு விரைவில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் தரப்பில் முன்னாள் எம்.பி. ராஜய்யா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் வேட்பு மனு தாக்கல் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்பு, இவரது மருமகள் சாரிகா மற்றும் 3 பேரக் குழந்தைகள் மர்மமான முறையில் தீயில் கருகி உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் ராஜய்யாவின் குடும்பத்தினர் மருமகளை கொடுமைப்படுத்தியது அம்பலமானது. மேலும், சாரிகாவின் கணவர் அனில் குமாருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
இந்நிலையில், சாரிகாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், முன்னாள் எம்.பி. ராஜய்யா, அவரது மனைவி மற்றும் மகன் அனில் குமார் மீது போலீஸார் வரதட்சணை புகார் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, அவர்களை நேற்று முன்தினம் இரவு கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர்களை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து, மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையில், கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர். சாரிகாவும், 3 குழந்தைகளும் எரிக்கப்படுவதற்கு முன்னர், உணவில் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். எனவே, ராஜய்யாவின் வீட்டில் இருந்து, உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தேடுதல் வேட்டை
சாரிகாவின் கணவருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் சனா என்ற பெண்ணையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
கணவர் அனில் குமார், சனாவுடன் தொடர்பு வைத்திருந்ததால், அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்திருப்பதாக, கடந்த 2014-ம் ஆண்டு சாரிகா புகார் எழுப்பியிருந்தார். எனவே, சனாவுக்கும் இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ள போலீஸார், அவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.