மேற்கு வங்கத் தேர்தலில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் இரண்டு பிரச்சாரக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு அங்கு கூட்டம் இல்லாததே காரணம் என சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்கச் சட்டப்பேரவையின் நான்காம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மூன்று பிரச்சாரக் கூட்டங்களுக்காக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா நேற்று கொல்கத்தா வந்திருந்தார்.
தனது முதல் கூட்டத்தை அவர் டோலிகன்சில் நடத்தினார். இதையடுத்து அவர் கலந்துகொள்வதாக இருந்த செராம்பூர் மற்றும் சின்சுரூவின் நேரடிக் கூட்டங்கள் ரத்தாகின. இதற்கு அங்கு பொதுமக்கள் கூட்டம் சேராததே காரணம் எனத் தெரிந்துள்ளது.
இதுகுறித்து கொல்கத்தா பகுதி பாஜக வட்டாரங்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''கூட்டத்தில் கலந்துகொள்ள சுமார் 7,000 பேர் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 500 பேர்கூட வரவில்லை. இதனால், அங்கு நேரில் சென்று பிரச்சாரம் செய்ய நட்டா மறுத்துவிட்டார். தனது செல்போன் மூலம் அங்கிருந்த கூட்டத்தினர் இடையே உரையைப் பேசி முடித்தார்'' எனத் தெரிவித்தனர்.
எனினும் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் பேசிய பாஜக தலைவர் சயாந்தன் பாசு கூறும்போது, ''நட்டா பயணித்த ஹெலிகாப்டரில் சிறு பிரச்சினை என்பதால்தான் அவர் கூட்டத்தை ரத்து செய்தார்'' என்று தெரிவித்தார்.