கேரளாவில் 140 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன், நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி 16.07 சதவீதம் வாக்குகள் பதிவாயின.
வாக்குப்பதிவு தொடங்கிய காலை 7 மணி முதலே பெரும்பாலான வாக்கு மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளைப் பதிவு செய்யத் தயாராக இருந்தனர்.
அரன்முலா பகுதியில் வாக்களிக்க நின்றிருந்த ஒருவர் திடீரென நிலைகுலைந்து விழுந்து இறந்தார். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் இவிஎம் இயந்திரங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்தன.
தர்மடம் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன், மெட்ரோ மேன் ஸ்ரீதரன் ஆகியோர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
மேற்கு வங்கத்தில் காலை 9 மணி நிலரவப்படி 15 சதவீத வாக்குகள் பதிவாயின. பெரும்பாலான வாக்குப்பதிவு மையங்களில் அமைதியாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. சில இடங்களில் மட்டும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. குறிப்பாக புர்பா சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் காலை வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் ஒருவர் காயமடைந்தார்.
அசாம் மாநிலத்தில் 40 தொகுதிகளுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 12.83 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.