தமிழகத்தில் பாஜகவுக்கு இடமில்லை என்று காலங்காலமாக கூறப்பட்டுவரும் கட்டுக்கதை தவறானது என்பதை தேர்தல் வாக்குப்பதிவு நிரூபிக்கும் என்று தமிழகத்துக்கான பாஜக பொறுப்பாளரும், தேசிய பொதுச்செயலாளருமான சி.டி.ரவி நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடக்கிறது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக 20 இடங்களில் போட்டியிடுகிறது. ஆனால், பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைப்பது கடினம் என்று பல்வேறு தேர்தல் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்திலும் பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கக்கூடாது என்று கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில் தமிழகத்துக்கான பாஜக பொறுப்பாளரும் கர்நாடக எம்எல்ஏவுமான சி.டி.ரவி நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஏப்ரல் 6ம் தேதி தென் மாநிலங்களில் பாஜகவுக்கு முக்கியமானநாள். அதிலும் தமிழகத்தில் பாஜகவுக்கு முக்கியமான நாள். தமிழ் மண்ணில் பாஜகவுக்கு இடமில்லை என்று நீண்டகாலமாகக் கூறப்பட்டுவரும் கட்டுக்கதை தவறானது என்பதை இந்தத் தேர்தல் நிரூபிக்கும்.
ஏப்ரல் 6ம் தேதி என்பது பாஜக கட்சி நிறுவப்பட்டநாள், அந்த நாளில் தமிழகத்தில் தாமரை மலரும். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும். களநிலவரம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சாதகமாக இருக்கிறது.
பாஜக 20 இடங்களில் மட்டுமே போட்டியிடுவதால், இந்தத் தேர்தலை மிகத் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. பாஜகவுக்கு ஆதரவாக அலை நிலவுகிறது என நான் உணர்கிறேன், நல்ல முடிகள் கிடைக்கும்.
தமிழகத்தில் அதிமுக, பாஜக இயற்கையான கூட்டணி. இந்த இரு கட்சியிலும் வாரிசு அரசியல் என்பது இல்லை. ஆனால், கருணாநிதி, மாறன் குடும்பத்தாரால் திமுக நடத்தப்படுகிறது, இந்தத் தேர்தலில் திமுகவை மக்கள் நிராகரிப்பார்கள்.
இந்தத் தேர்தல் அதிமுக, திமுக இடையிலான போட்டியாக இருக்கலாம், முழுத் தேர்தலுக்கான திட்டத்தையும் அமைத்திருப்பது பாஜகதான். அதிமுக கூட்டணியில் நாங்கள் சிறிய கட்சியாக இருந்தாலும், வெற்றிவேல் யாத்திரை, நம்ம ஊரு பொங்கள், ஜல்லிக்கட்டு என எங்களது பிரச்சாரத்தை நன்கு வெளிப்டுத்தியுள்ளோம்.
இவ்வாறு சிடி ரவி தெரிவித்தார்.