அசாம் மாநிலத்தில் இறுதிக்கட்டமாக 40 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 3-ம் கட்டமாக 31 தொகுதிகளுக்கும் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.
அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கு ஏற்கெனவே 2 கட்டத் தேர்தல்கள் கடந்த மார்ச் 27 மற்றும் ஏப்ரல் 1ம் தேதி நடந்தமுடிந்துவிட்டன. இந்நிலையில், இறுதிக்கட்டமாக 40 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இதில், 337 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
சமீபத்தில் சர்ச்சையாகப் பேசி தேர்தல் ஆணையத்தின் தண்டனையைப் பெற்ற பாஜக அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வாஸ்சர்மா, மாநில பாஜக தலைவர் ரன்ஜீத் குமார் தாஸ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் களத்தில் உள்ளனர்.
இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதும், பல்வேறு வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க வந்த மூத்த குடிமக்கள், மற்றும் முதல் வாக்காளருக்கு பாரம்பரிய துண்டு அணிவித்து தேர்தல் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.
வாக்களர்கள் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி வாக்களிக்கவும், சமூகவிலகலைக் கடைபிடிக்கவும் வலியுறுத்தப்பட்டனர். வாக்காளர்கள் அனைவரும் முகக்கவசம் அணியவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. இதனால் வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து வாக்களித்தனர்.
தேர்தலில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க 320 கம்பெனி பாதுகாப்புபடையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 79.19 லட்சம் வாக்களர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர். 45,604 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தற்போது எம்எல்ஏவாக இருக்கும் 20 பேரில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 8 பேர், பாஜகவில் 5 பேர், ஏஐயுடிஎப் கட்சி, பிபிஎப் ஆகிய கட்சிகளில் இருந்து தலா 3 பேர், ஏஜிபியில் இருந்து ஒரு எம்எல்ஏ ஆகியோர் இந்த கடைசிக் கட்டத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கு ஏற்கெனவே 2 கட்டங்களாக கடந்த மார்ச் 27 மற்றும் கடந் 1-ம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. 3-வது கட்டமாக 31 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது
தெற்கு 24 பர்கானா, ஹவுரா, ஹூக்ளி ஆகிய மாவட்டங்களில் கடும் பாதுகாப்புடன், தீவிரமான கரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில், சமூக விலகலைக் கடைபிடித்து வாக்களித்து வருகின்றனர்
78.5 லட்சம் வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க உள்ளன. 205 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் பாஜக தலைவர் ஸ்வபன் தாஸ்குப்தா, அமைச்சர் அஷிமா பத்ரா, மார்க்சிஸ்ட் தலைவர் கந்தி கங்குலி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
பதற்றமான வாக்குச்சாவடி அமைந்திருக்கும் பகுதிகளில் 144 தடை உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது. 10,871 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன, 618 கம்பெனி பாதுகாப்புப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.