இந்தியா

சத்தீஸ்கரில் தவறான உளவுத் தகவலால் மாவோயிஸ்ட் பொறியில் சிக்கிய பாதுகாப்பு படையினர்

செய்திப்பிரிவு

சத்தீஸ்கரின் பீஜப்பூர், சுக்மா மாவட்டங்களுக்கு உட்பட்ட பஸ்தார் வனப் பகுதியில் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இங்குள்ள ஜாகர்குண்டா – ஜோனகுடா பகுதியில் மாவோயிஸ்ட்களின் முக்கிய தலைவர் மாத்வி ஹித்மா, மற்றொரு தலைவர் சுஜாதா இருப்பதாக உளவுத் தகவல் கிடைத்தது. இதையடுத்து பீஜப்பூர், சுக்மா மாவட்டங்களின் 6 முகாம்களில் இருந்து 2,000 வீரர்கள் தேடுதலில் ஈடுபட்டனர்.

அப்போது பாதுகாப்பு படையின் ஒரு குழுவை சுமார் 400 நக்சலைட்கள் 3 பகுதிகளில் இருந்தும் திடீரென சுற்றி வளைத்தனர். இரு தரப்பிலும் கடும் சண்டை மூண்டது. பாதுகாப்பு படையினர் தங்கள் அனைத்து வலிமையையும் பயன்படுத்தி போரிட்டனர். எனினும் பாதுகாப்பு படையினர் 22 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஒரு வீரரை காணவில்லை. மோதலுக்குப் பிறகு பாதுகாப்பு படையினரின் 20-க்கும் மேற்பட்ட ஆயுதங்களுடன் மாவோயிஸ்ட்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர்.

இந்நிலையில் தவறான உளவுத் தகவலால் மாவோயிஸ்ட்களின் ‘U’ வடிவ பொறியில் பாதுகாப்பு படையினர் சிக்கிக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், சிஆர்பிஎப் இயக்குநர் குல்தீப் சிங் ஆகியோர் இதனை மறுக்கின்றனர்.

சிஆர்பிஎப் இயக்குநர் குல்தீப் சிங் கூறும்போது, “உளவுத் துறை அல்லது ஆபரேஷன் தோல்வி ஏற்பட்டுள்ளதாக கூறுவதில் அர்த்தமில்லை. உளவுத் துறை தோல்வியாக இருந்தால் படை கள் இந்த நடவடிக்கைக்கு சென் றிருக்காது. ஆபரேஷன் தோல்வி என்றால் 25 – 30 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். இறந்த மற்றும் காயம் அடைந்த மாவோயிஸ்ட்களை டிராக்டர்களில் எடுத்து சென்றனர்” என்றார்.

நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைக் கான தலைவர் அசோக் ஜூஜா கூறும்போது, “காலை 11.30 மணிக்கு தொடங்கிய சண்டை 4 மணி நேரம் நீடித்தது. ராக்கெட் லாஞ்சர், கையெறி குண்டு, நவீன ஆயுதங்களை மாவோயிஸ்ட்கள் பயன்படுத்தியுள்ளனர்” என்றார்.

தாக்குதலில் இறந்த வீரர்களின் உடல்களுக்கு முதல்வர் பூபேஷ் பாகல் நேற்று அஞ்சலி செலுத்தினார். மாவோயிஸ்ட் களுக்கு எதிரான போர் தொடரும் என அவர் திட்டவட்டமாக கூறினார்.

SCROLL FOR NEXT