மகாராஷ்டிராவில் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவுதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு விடுதிகள், தியேட்டர்கள் மால்கள், மதுபான விடுதிகள், மூடப்படுகிறது. வார இறுதி நாட்களில் அத்தியாவசிய சேவை தவிர மற்ற அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக ஓராண்டு ஆகும் நிலையில் பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்தது. இந்தநிலையில் கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம் மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அண்மையில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
மகாராஷ்டிராவின் புனே, அமராவதி மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. யவத்மால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. நாக்பூரில் முழு ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது.
கரோனா பரவலை கட்டுப்படுத்த முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் ஏற்கெனவே ஆலோசனை நடைபெற்றது. இந்தநிலையில் கரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதுகுறித்த ஆய்வு செய்த மாநில அரசின் நிபுணர்கள் குழுவும் கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர தீவிரமான கட்டுப்பாடுகள் அவசியம் என வலியுறுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் கரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் உத்தவ் தாக்கரே ஏற்கெனவே ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பல மாவட்டங்களில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அதன் பயன் குறித்து விரிவாக ஆலோசனை நடைபெற்றது.
இந்தநிலையில் கரோனா பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுளை தீவிரப்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிர அரசின் அறிவிப்பு வருமாறு:
மகாராஷ்டிராவில் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உணவு விடுதிகள், மால்கள், மதுபான விடுதிகள், மூடப்படுகிறன. ஹோம் டெலி வரிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
பகல் நேரத்தில் 5 பேருக்கு மேல் ஓரிடத்தில் கூட தடை விதிக்கப்படுகிறது.
தொழிற்சாலைகள் இயங்க தடையில்லை. அதேசமயம் போதிய கரோனா வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும்.
காய்கறி சந்தைகள் செயல்பட கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
வார இறுதி நாட்களில் அத்தியாவசிய சேவை தவிர மற்ற அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
அனைத்து தியேட்டர்களும் மூடப்படும். படப்பிடிப்பு உரிய கட்டுப்பாடுகளுடன் நடத்திக் கொள்ளலாம்.
50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே பொதுப் போக்குவரத்து செயல்படும்.
அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்ற வேண்டும்.
அத்தியாவசிய தேவை உள்ள ஊழியர்கள் மட்டுமே அனுமதி பெற்று வர வேண்டும்.
இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நாளை முதல் அமலுக்கு வருகிறது.