கரோனா வைரஸ் லாக்டவுன் காலத்தில் வங்கியில் கடன்பெற்றோருக்கு விதிக்கப்படும் வட்டிக்குக் கூட்டு வட்டி விதிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.1,800 கோடி முதல் ரூ.2 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரோனா காலத்தில் வங்கியில் கடன் பெற்றவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த மார்ச் முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ரிசர்வ் வங்கி அளித்திருந்தது. ஆனால், அந்தச் சலுகை காலத்தில் கடன் தவணையைச் செலுத்தாமல், ஒத்திவைப்புச் சலுகை பெற்றவர்களுக்குக் கூட்டு வட்டி விதிக்கப்பட்டது.
வட்டிக்கு வட்டி விதிப்பதைத் தள்ளுபடி செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சிறு, குறுந்தொழில், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு ரூ.2 கோடி வரை வங்கியில் கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படாது என்று தெரிவித்தது.
இந்த வழக்கில் கடந்த மாதம் 23ம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், " கரோனா லாக்டவுன் காலத்தில் 2020, மார்ச் 31 முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை வங்கியில் கடன் பெற்றவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த அளிக்கப்பட்ட சலுகைக் காலம் நீட்டிக்கப்படாது. முழு வட்டித்தள்ளுபடியும் கிடையாது.
கடன் தவணை சலுகைக் காலமான மார்ச் 31 முதல் ஆகஸ்ட் 31 தேதி வரை வாடிக்கையாளர்கள் கடன் தவணை செலுத்தச் சலுகை பெற்றிருந்து அவர்களிடம் இருந்து கூட்டு வட்டி, அல்லது அபராத வட்டியை வங்கிகள் வசூலித்து இருந்தால் அவர்களிடம் அந்த வட்டித்தொகையைத் திருப்பி அளிக்க வேண்டும். அல்லது அடுத்த இஎம்ஐ செலுத்தும்போது அதைக் கழித்துக்கொள்ள வேண்டும் " எனத் தீர்ப்பளித்திருந்தது.
இதுகுறித்து வங்கி வட்டாரங்கள் கூறுகையில் " தொடக்கத்தில் கடன் ஒத்தி வைப்பு சலுகையை 60 சதவீதம் வாடிக்கையாளர்கள் பெற்றனர். அதன்பின் படிப்படியாகக் குறைந்து 40 சதவீதமாகக் குறைந்து. லாக்டவுன் தளர்வுகள் வந்தபின் வங்கிகள் கடன் வசூலிப்பில் ஓரளவு முன்னேற்றமும் இருந்தது. ஒத்திவைப்பு சலுகை பெற்றோர் 25 சதவீதமாகக் குறைந்தனர்.
கடன் ஒத்திவைப்பு சலுகையைப் பெற்றவர்களுக்கு மட்டுமே குறிப்பிட்ட காலத்துக்குக் கூட்டுவட்டியைத் தள்ளுபடியை வங்கிகள் வழங்கியுள்ளன. உதாரணமாக ஒரு வாடிக்கையாளர் 3 மாதங்களுக்கு மட்டும்தான் ஒத்திவைப்பு சலுகை பெற்றிருந்தால், அந்த 3 மாத காலத்துக்கு மட்டும்தான் கூட்டுவட்டி தள்ளுபடி இருக்கும்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 6 மாத காலத்துக்கு ஒத்திவைப்பு சலுகை பெற்றவர்களுக்குக் கூட்டுவட்டி தள்ளுபடி செய்வதன் மூலம் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.1800 கோடி முதல் ரூ.2ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படலாம். இது உத்தேசமான கணக்குதான்" எனத் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே வங்கிகள் கூட்டு வட்டியை தள்ளுபடி செய்ததன் மூலம் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட அரசு இழப்பீடு தர வேண்டும் என்று இந்திய வங்கிகள் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது. பல்வேறு தரப்பினருடன் ஆலோசனைக்குப்பின் மத்திய அரசு இறுதி முடிவை எடுக்கும் எனத் தெரிகிறது.