இந்தியா

உ.பி. முதல்வர் யோகியின் சொந்த மாவட்டமான கோரக்பூரில் பாஜக தலைவர் சுட்டுக்கொலை

ஆர்.ஷபிமுன்னா

உத்தரப்பிரதேச பஞ்சாயத்து தேர்தலின் பாஜக வேட்பாளர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த மாவட்டமான கோரக்பூரில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக ஆளும் உ.பி.யில் பஞ்சாயத்து தேர்தல் துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் கோரக்பூர் மாவட்ட நாராயண்பூர் கிராமததை சேர்ந்த பாஜக தலைவர் பிரஜேஷ்சிங் (52) நேற்று முன் தினம் நள்ளிரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

தனது பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரான பிரஜேஷ், பிரச்சாரத்தை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். இவர் 10 கி.மீ தொலையிலுள்ள கோரக்பூர் நகரில் தங்கியிருந்தார்.

அப்போது அடையாளம் தெரியாத இருவர் திடீர் என வந்த பிரஜேஷை துப்பாக்கியால் சுட்டு விட்டுத் தப்பி விட்டனர். இதில், பிரஜேஷின் தலை மற்றும் மார்பில் குண்டு காயம்பட்டு அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பலியானார்.

பிரஜேஷின் வாகனத்தை சுமார் அரை கி.மீ தொலைவில் அவரது ஆதரவாளர்கள் சிலர் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். இவர்கள் பிரஜேஷை பி.எஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தனர்.

சம்பவம் குறித்து ’இந்து தமிழ் திசை’ இணையத்திடம் கோரக்பூரில் புதிய எஸ்எஸ்பியாகப் பதவி ஏற்ற தமிழரான பி.தினேஷ்குமார் கூறும்போது, ‘‘கடந்த மார்ச்சில் கொலையான ஹிதேஷ் மவுரியா வழக்கில் ஆறு பேரை தற்போது கைது செய்துள்ளோம்.

பிரஜேஷின் கொலை வழக்கில் சந்தேகத்திற்கிடமானப் புகார் அளித்தவர்களை பிடித்து விசாரித்து வருகிறோம். விரைவில் உண்மை குற்றவாளிகள் பிடிபடுவார்கள்.’’ என நம்பிக்கையுடன் பேசினார்.

இதனிடையே, பிரஜேஷின் பலியான தகவலுக்கு பின் மேலும் பல ஆதரவாளர்கள் மருத்துவமனையின் முன் கூடி தர்ணா செய்தனர். இந்த கோரக்பூர், முதல்வர் யோகியின் சொந்த மாவட்டம் ஆகும்.

இது குறித்து தர்ணா செய்தவர்களில் ஒருவரான பாஜக நிர்வாகி ராஜேஷ்சிங் கூறும்போது, ‘‘முதல்வரின் சொந்த ஊரிலேயே ஆளும் கட்சியினரை கொலை செய்யும் அளவிற்கு உபி கிரிமினல்கள் வளர்ந்திருப்பது கவலை தருகிறது.

மக்களவை தேர்தல் பிரச்சாரத்திலும் இங்கு முக்கிய பங்கு வகித்த பிரஜேஷ்சிங் தனது சொந்த கட்சியின் ஆட்சியிலேயே பாதுகாப்பின்றி பலியாகி இருப்பதை என்னவென்று சொல்வது?’’ எனக் குறைபட்டுக் கொண்டார்.

முதல்வர் யோகி ஆட்சியில் பலியான ஆளும் கட்சியினர்
இதுபோல், ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் உ.பி.யில் கொலை செய்யப்படுவது முதன்முறையல்ல. கடந்த நான்கு வருடங்களாகக் கொல்லப்பட்ட பலரது பின்னணியிலும் அரசியல் காரணங்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது.

எனினும், அதை மறைத்து நிலம் அல்லது சொந்த பகை உள்ளிட்ட வேறு பல காரணங்களை காவல்துறை கூறி வருவதாகப் புகார் உள்ளது. இதற்குமுன், உ.பி.யின் டூண்ட்லா நகரின் பாஜக துணைத்தலைவரான தயா சங்கர் குப்தா(45) கொலை செய்யப்பட்டார்.

கடந்த வருடம் அக்டோபரில் கொல்லப்பட்ட இவ்வழக்கில் ஏழு பேர் கைதாகி உள்ளனர். இதற்கு ஒரு மாதம் முன்பாக பரேலியில் சஞ்சய்சிங் பஹதூரியா(45) எனும் மருத்துவர் கொல்லப்பட்டார்.

பாஜகவின் தோழமை அமைப்பான இந்து யுவ வாஹிணியின் துணைத்தலைவரான சஞ்சய்சிங், பரேலியில் சிறிய மருத்துவமனை நடத்தி வந்தார். இதில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த வருடம் ஆகஸ்டில் பாஜகவின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கின் உறுப்பினரான சஞ்சய் கோகர் தனது வயலில் கொல்லப்பட்டார். இவர், பாஜகவின் பாக்பத் மாவட்ட முன்னாள் நிர்வாகியும் ஆவார்.

இதில் ஆறு பேர் கைதாகி இருந்தனர். கடந்த வருடம் பிப்ரவரியில் உபியின் தலைநகரான லக்னோவிலும் ஒரு கொலை நடைபெற்றது.

இதில், தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த விஷ்வ இந்து மஹாசபாவின் தலைவரான ரஞ்சீத் பச்சன் சுட்டுக் கொல்லப்பட்டார். மூவர் இவ்வழக்கில் கைதாகி உள்ளனர்.

கடந்த அக்டோபர் 2019 இல் இந்து மஹாசபாவின் முக்கியத் தலைவரான கமலேஷ் திவாரி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்து சமாஜ் கட்சியின் தலைவருமான இவரது வழக்கில் மூவர் கைதாகி இருந்தனர்.

SCROLL FOR NEXT