கரோனா காரணமாக பயண வாய்ப்பு குறைவாக இருப்பதாக பலர் புகார் கூறி வரும் நிலையில், கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதி காரிலேயே 10 ஆயிரம் கி.மீ. தூரத்தை கடந்து ஊர் சுற்றி வருகின்றனர்.
கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர்கள் ஹரிகிருஷ்ணன்-லட்சுமி கிருஷ்ணா தம்பதி. இவர்கள் கடந்த ஆண்டு வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல விரும்பினர். ஆனால் கரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்பட்டதால், இருசக்கர வாகனத்தில் தாய்லாந்து செல்ல திட்டமிட்டனர்.
இதுதவிர, நாடு முழுவதும் பொது போக்குவரத்து மூலம் பயணிக்க விரும்பினர். இறுதியில், தங்களுடைய ஹூண்டாய் கிரேட்டா காரிலேயே நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்தனர். இதற்காக, இருவரும் முறையே, விற்பனை அதிகாரி மற்றும் கிராபிக் வடிவமைப்பாளர் பணியிலிருந்து விலகினர். பின்னர் கடந்த ஆண்டு அக்டோபர் 28-ம்தேதி தங்கள் பயணத்தைத் தொடங்கினர்.
இதுகுறித்து ஹரிகிருஷ்ணன் கூறும்போது, “காரிலேயே பயணம் செய்வதுடன் அதிலேயே ஓய்வு எடுக்கிறோம். பெட்ரோல் நிலையங்களில் உள்ள குளியல றைகளில் குளிக்கிறோம். உணவை யும் நாங்களே சமைத்துக் கொள் கிறோம்.
இதற்காக 5 கிலோ சிலிண்டர், ஸ்டவ் வைத்துள்ளோம். 60 நாட்களில் பயணத்தை முடிக்க திட்டமிட்டோம். ஆனால் 130 நாட்களைக் கடந்துவிட்டது. இதுவரை 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்துள்ளோம். இம்மாதத்துக்குள் சொந்த ஊர் திரும்புவோம் என நம்புகிறேன். இந்தப் பயணத்துக்காக ரூ.2.5 லட்சம் ஒதுக்கினோம். ஆனால் அதைவிட குறைவாகவே செலவாகி உள்ளது” என்றார்.
இந்தத் தம்பதி டின்பின் ஸ்டோரிஸ் என்ற பெயரில் யூ-டியூப் சேனல் நடத்துகின்றனர். இதில் தங்கள் பயண அனுபவங்களை பகிர்கின்றனர். இந்த சேனலின் பார்வையாளர் எண்ணிக்கை 1.01 லட்சமாக உள்ளது.