இந்தியா

7-வது ஊதிய கமிஷனில் பரிந்துரை: மத்திய அரசின் ஆண் ஊழியர்களுக்கும் குழந்தைகளை வளர்க்க விடுமுறை

ஆர்.ஷபிமுன்னா

மனைவியின்றி தனியாக வாழும் அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை வளர்க்க விடுமுறை அளிக்க வேண்டும் என்று 7-வது ஊதிய கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்காக கடந்த முறை 6-வது ஊதிய கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத் தப்பட்டபோது, குழந்தைகளை பேணி வளர்க்க பெண் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. முதல் 2 குழந்தைகள் 18 வயது நிறைவடையும் வரை 2 ஆண்டு காலத்திற்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. அப்போது, மனைவியின்றி தனியாக வாழும் ஆண் ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை வளர்க்க சிரமப்படுவதாகவும், அவர்களுக்கும் பெண் ஊழியர்களை போல் இந்த விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது. இதை 7-வது ஊதிய கமிஷன் ஏற்றுக்கொண்டுள்ளது.

ஊதிய கமிஷனின் பரிந்துரை மத்திய நிதி அமைச்சரிடம் நேற்று முன்தினம் ஒப்படைக்கப்பட்டது. இதில், “மனைவியின்றி தனியாக வாழும் ஆண்கள் தங்கள் பணியுடன் சேர்த்து, குழந்தைகளையும் பேணிக் காப்பது பெரிய சுமையாகும். எனவே, அவர்களுக்கும் பெண்களை போல் 2 ஆண்டு விடுமுறை அளிக்கப்பட வேண்டும்” என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதே பரிந்துரையில் 7-வது ஊதிய கமிஷன் கணவர் இன்றி தனியாக வாழும் பெண்களுக்கும் ஒரு சலுகை அளித்துள்ளது. இதன்படி குழந்தைகளை பேணிக் காக்கும் விடுமுறையை வருடத்தில் 6 முறை இடைவெளி விட்டு எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளது.

இதற்கு முன் அனைத்து பெண் களும் குழந்தைகளுக்கான விடு முறையை வருடத்தில் 3 முறை மட்டுமே எடுக்க முடியும் என்றிருந்தது. இந்நிலையில் தனியாக வாழும் பெண் களுக்கு குழந்தைகளை காப்பதில் கூடுதல் சுமை உள்ளதால், இந்த சுமையை குறைக்க இந்த சலுகை உதவும் என கமிஷன் காரணம் கூறியுள் ளது. குழந்தைகளை பேணிக் காப்பதற்கான விடுமுறையை சில பெண்கள் அவசியம் இல்லாத போதும், அதை பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது. இதை தடுக்கவும் 7 -வது ஊதிய கமிஷன் ஒரு யோசனையை அளித்துள்ளது. இதில், 2 வருட விடுமுறையை இரண்டாவது ஆண்டில் பயன்படுத்தும்போது, 80 சதவீத ஊதியம் மட்டுமே அளிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. முதல் வருடம் வழக்கம் போல் 100 சதவீத ஊதியம் கிடைக்கும்.

ஊதிய கமிஷனின் பரிந்துரைகளில் மத்திய அரசு ஒருசில மாற்றங் கள் மட்டுமே செய்வது வழக்கம். மற்றவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ளும் என்பதால், மேற்கண்ட குழந்தைகள் மீதான விடுமுறை முழுமையாக அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை 180 நாட்கள் அளிக்கப்படுகிறது. இதை அதிகரிக்க வேண்டும், உடல் ஊனமுற்ற குழந்தை களுக்காக 18 வயதுக்கு பிறகும் பேணிக் காக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்க ப்பட்டது. இதை ஊதிய கமிஷன் ஏற்கவில்லை.

SCROLL FOR NEXT