மகள்களுடன் அதியா சப்ரி 
இந்தியா

முத்தலாக் வழக்கின் மனுதாரர் அதியாவுக்கு மாதம் ரூ.21,000 ஜீவனாம்சம் வழங்க உத்தரவு

செய்திப்பிரிவு

முஸ்லிம் மதத்தில் ஆண்கள் 3 முறை தலாக் (முத்தலாக்) கூறி மனைவியை விவகாரத்து செய்யும் நடைமுறை வழக்கத்தில் இருந்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி முத்தலாக்குக்கு தடை விதிக்கும் முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் கடந்த 2019-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது.

முத்தலாக் விவாகரத்துக்கு எதிராக 6 பெண்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அவர்களில் ஒருவர் அதியா சப்ரி. இவர் உத்தர பிரதேசத்தின் சஹரான்பூரை சேர்ந்தவர்.

கடந்த 2012-ம் ஆண்டில் சுல்தான்பூரை சேர்ந்த வஜித் அலி என்பவருக்கும் அதியா சப்ரிக்கும் திருமணம் நடைபெற்றது. அடுத்தடுத்து 2 பெண் குழந்தைகள் பிறந்ததால் அதியாவை 2015-ம் ஆண்டில் முத்தலாக் கூறி வீட்டில் இருந்து வெளியேற்றிவிட்டனர்.

இதுதொடர்பாக கடந்த 2015-ம்ஆண்டில் சஹரான்பூர் குடும்ப நல நீதிமன்றத்தில் அதியா வழக்கு தொடர்ந்தார். வஜித் அலி சொந்தமாக மோட்டார் வாகன விற்பனையகம் நடத்தி வருகிறார். அவர் மாதத்துக்கு ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக வருவாய் ஈட்டுகிறார். எனவே எனக்கும் எனது 2 பெண் குழந்தை களுக்கும் மாதம் ரூ.25,000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று அதியா மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நரேந்திர குமார், "அதியாவுக்கும் அவரது குழந்தைகளுக்கும் வஜித் அலி மாதந்தோறும் ரூ.21,000-ஐ ஜீவனாம்சமாக வழங்க வேண்டும். கடந்த 2015 முதல் இதுவரை 5 ஆண்டுகளுக்கும் சேர்த்து ரூ.13.44 லட்சம் ஜீவனாம்சத்தை அதியாவிடம் ஒரே தவணையாக வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

அதியா கூறும்போது, ‘‘பணத்தை விட எனது மான மரியாதை போராட்டத்துக்கு கிடைத்த பெரிய வெற்றி இது. வழக்கில் கிடைத்த தீர்ப்பு, ஒட்டு மொத்த முஸ்லிம் பெண் களுக்கும் கிடைத்த வெற்றி. என்னை போல பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்கள் துணிச்சலாக நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டும்’’ என்றார்.

SCROLL FOR NEXT