சகிப்பின்மையை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்று பிரிட்டனில் பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்தார்.
மேலும், இந்தியக் குடிமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதுகாத்திட தமது அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரிட்டன் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கேமரூன் தலைமையில் இருநாடுகளைச் சேர்ந்த பல்வேறு துறை பிரதிநிதிகள் அளவிலான இந்த உயர் நிலைக் கூட்டத்தில், இரு தரப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது, இந்தியாவில் சகிப்பின்மை விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, "நாங்கள் ஜனநாயகத்தையும் பேச்சுரிமையையும் காத்திடுவதற்கு உறுதிபூண்டுள்ளோம். இந்தியா ஒருபோதும் சகிப்பின்மையை சகித்துக்கொள்ளாது. இந்தியா காந்தி, புத்தர் பிறந்த பூமி. எங்கள் சமூகம் சகிப்பின்மை சமூகம் அல்ல.
அதேபோல், குடிமகன்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதுகாத்திட அரசு உறுதிபூண்டுள்ளது. குடிமகன்களுக்கு எதிரான சம்பவங்களை நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம்" என்றார்.
2002 குஜராத் கலவரம் குறித்த கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளித்தபோது, "குஜராத் நிகழ்வுகளுக்குப் பிறகு பிரிட்டனில் காலடி எடுத்துவைக்க நான் ஒருபோதும் தடுக்கப்படவில்லை. உரிய கால அவகாசம் இல்லாததால்தான் நான் நீண்டகாலமாக பிரிட்டனுக்கு வர முடியாமல் போனது" என்றார் மோடி.
இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கிடைத்திட பிரிட்டன் ஆதரவு தெரிவித்திருப்பதகாவும், அதற்கு தாம் நன்றி கூறிக்கொள்வதகாவும் குறிப்பிட்டார்.
மேலும், இந்தியா - பிரிட்டன் இடையே 89 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பிரிட்டன் பிரதமர் கேமரூன் கூறும்போது, இந்தியாவுடன் பல துறைகளில் இணைந்து செய்லபட விரும்புவதாகவும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கிடைக்க பிரிட்டன் ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.
மோடி நம்பிக்கை
பிரதமரான பிறகு முதன்முறையாக 3 நாள் அரசு முறை பயணமாக பிரிட்டன் சென்றுள்ள மோடிக்கு தலைநகர் லண்டனில் ராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதன்பிறகு மோடி, டவுனிங் சாலையில் உள்ள பிரதமர் டேவிட் கேமரூன் இல்லத்துக்கு சென்றார்.
அப்போது மோடியை உற்சாகத்துடன் வரவேற்ற கேமரூன், "உங்கள் தலைமையின் கீழ் இந்திய-பிரிட்டன் உறவு மேலும் வலுவடையும் என்று நம்புகிறேன்" என்றார்.
மோடி கூறும்போது, "நம் இரு நாடுகளுக்கிடையிலான உறவு ஆக்கபூர்வமானதாக இருக்கும். அது மட்டுமல்லாது, உலக நாடுகள் மற்றும் மனித இனத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் நம்புகிறேன்" என்றார்.
பின்னர் மோடி, கேமரூன் தலைமையில் இருநாடுகளைச் சேர்ந்த பல்வேறு துறை பிரதிநிதிகள் அளவிலான உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அதன் பின்னர் அங்கிருந்து அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு சென்ற மோடி, அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டு கூட்டத்திலும் பிறகு லண்டன் கில்ட் ஹாலிலும் மோடி உரையாற்றத் தொடங்கினார்.
இந்தப் பயணத்தின்போது, பாதுகாப்பு, நிதி, கல்வி, சுகாதாரம், ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
முன்னதாக, லண்டன் ஹீத்ரு விமான நிலையம் சென்றடைந்த மோடியை பிரிட்டன் - இந்தியரும் வேலைவாய்ப்பு இணை அமைச்சருமான பிரீத்தி படேல், வெளியுறவு மற்றும் காமன்வெல்த் இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வைர், இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் ஜேம்ஸ் இவான், பிரிட்டனுக்கான இந்தியா தூதர் ரஞ்சன் மத்தாய் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் அங்கு வசிக்கும் சீக்கியர்கள் குழுவையும் சந்தித்தார்.
இதுதொடர்பாக மோடி ட்விட்டரில் கூறும்போது, "லண்டனைச் சென்றடைந்து விட்டேன். இங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். இந்தப் பயணத்தால் இருதரப்பு உறவு மேலும் வலுவடையும்" என்றார்.
பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் ட்விட்டரில் கூறும்போது, "பிரிட்டனுக்கு வந்துள்ள மோடியை இந்திய வம்சாவளியினர் சார்பில் வரவேற்கிறோம்" என்றார்.