காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது தமிழகம், அசாம், கேரளத் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளார்.
பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ராவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ள பிரியங்கா காந்தி பிரச்சாரத்தை ரத்து செய்துள்ளார்.
இது தொடர்பாக பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட வீடியோவில் உள்ள செய்தியில், "கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட ஒருவருடன் தொடர்பில் இருந்தேன். நான் பரிசோதனை செய்து கொண்டபோதிலும் எனக்கு நெகட்டிவ் என முடிவு கிடைத்துள்ளது. இருப்பினும் மருத்துவர்கள் அறிவுரைப்படி தனிமைப்படுத்திக்கொள்ள இருக்கிறேன்.
துரதிர்ஷ்டமாக, எனது பிரச்சாரப் பயணத்தை நான் தமிழகம், கேரளா, அசாம் மாநிலங்களில் ரத்து செய்கிறேன். என்னால் பிரச்சாரத்தில் பங்கேற்க முடியாமைக்கு ஒவ்வொருவரிடமும் மன்னிப்பு கோருகிறேன். யாருக்கெல்லாம் பிரச்சாரம் செய்ய இருந்தேனோ அவர்கள் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்து தெரிவிக்கிறேன். அனைவரும் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள். காங்கிரஸ் வெல்லும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், பிரியங்கா காந்தி, கரோனாவால் பாதிக்கப்பட்ட யாருடன் தொடர்பில் இருந்தேன் எனும் விவரத்தையும், தனது கணவருக்கு கரோனா இருப்பதையும் அவர் தெரிவிக்கவில்லை. அதுகுறித்து அவர் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கவில்லை. ஆனால், ஆங்கில ஊடகங்கள் பெரும்பாலானவற்றில் ராபர்ட் வத்ராவுக்கு கரோனா தொற்று என்பது செய்தியாக வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்றும், நாளையும் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்ய இருந்தார். கேரளாவில் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடத் திட்டமிட்டிருந்தார். பிரியங்கா காந்தி தனிமைப்படுத்திக் கொண்டதால், அந்தப் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.