இந்தியா

‘‘பாஜகவிடம் பணம் வாங்கிக் கொண்டு  ஹைதராபாத்தில் இருந்து ஒருவர் வருகிறார்’’- ஒவைசி மீது மம்தா பானர்ஜி கடும் சாடல்

செய்திப்பிரிவு

பாஜகவிடம் பணம் வாங்கிக் கொண்டு ஹைதராபாத்தில் இருந்து ஒருவர் மேற்குவங்கத்திற்கு வந்துள்ளார் என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸியை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி கட்சி கடுமையாகப் போராடி வருகிறது.

அதேநேரத்தில் மம்தாவுக்கு கடும் நெருக்கடியும், சவால்களையும் அளித்துவரும் பாஜக ஆட்சியைப் பிடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, காய்களை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொரு புறம் காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். பிஹார் சட்டப்பேரவையில் நடந்த தேர்தலில் 5 இடங்களில் வெற்றி பெற்ற ஏஐஎம்ஐஎம் கட்சி மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிடுகிறது.

இதனால் மேற்கு வங்கத்தில் நாள்தோறும் கட்சித் தலைவர்களுக்கு இடையே பரபரப்பான வாதங்கள், அறிக்கைகள் அனல் பறக்க வெளியாகி வருகின்றன.

திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பேசும்போது, ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசியை பாஜகவின் பி டீம் என்றும், பணம் பெற்றுக்கொண்டு வாக்குகளைப் பிரிக்கப் பார்க்கிறார் என்று ஏற்கெனவே குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலடி கொடுத்த அசாதுதீன் ஒவைசி பணத்தால் ஒவைசியை வாங்குவதற்கு யாரும் இல்லை, மம்தாவின் கட்சியைச் சேர்ந்தவர்கள் பலரும் பாஜக பக்கம் போய்ச் சேரும்போது அவர் அதை நினைத்து வருத்தப்பட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

ஒவைசி

இந்தநிலையில் மேற்குவங்க மாநிலம் கூச் பிஹாரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மம்தா பானர்ஜி ஒவைசியின் பெயரை குறிப்பிடாமல் கடுமையாக விமர்சி்ததார். அவர் பேசியதாவது:

‘‘ஹைதராபாத்தில் இருந்து ஒருவர் மேற்குவங்கத்திற்கு வந்துள்ளார். அவர் பாஜகவிடம் பணம் வாங்கிக் கொண்டு வந்துள்ளார். அவரை மேற்குவங்க மக்கள் அனுமதிக்க கூடாது. அவர் பாஜகவின் பி டீம். பாஜக எதிர்ப்பு வாக்குகளை சிதறடி வைப்பது தான் அவரது நோக்கம். அதற்காக பாஜக ஏவி விட்ட அம்பு தான் அவர். அவரிடம் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’’ எனக் கூறினார்.

மேற்குவங்க மாநிலத்தில் மொத்தம் 78 தொகுதிகளில் முஸ்லிம் மக்களின் வாக்குகள் கணிசமாக உள்ளன. முர்ஷிதாபாத் மாவட்டத்தில் முஸ்லிம் வாக்காளர்களே தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர். இங்கு 13 தொகுதிகளில் ஏஐஎம்ஐஎம் கட்சி போட்டியிடுகிறது. தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஒவைசி பிரச்சாரம் செய்து வருகிறார்.அவர் தனது பிரச்சாரத்தில் மம்தா பானர்ஜியையும், காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

SCROLL FOR NEXT