அசாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக எம்எல்ஏ காரில் இவிஎம் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்ட விவகாரம் வெளியானதையடுத்து, மின்னணு வாக்கு இயந்திரங்கள் குறித்து அனைத்து தேசியக் கட்சிகளும் மறு ஆய்வு செய்வது அவசியம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
அசாம் மாநிலத்தில் நேற்று 39 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. சில இடங்களில் நடந்த வன்முறைச் சம்பவங்களைத் தவிர பெரிதாக எங்கும் நடக்கவில்லை. 76 சதவீதம் வாக்குப்பதிவு நடந்தது.
இதில் கரீம்கஞ்ச் பகுதியில் நடந்த வன்முறைச் சம்பவம்தான் சமூக வலைதளத்தில் பெரிதாகப் பகிரப்பட்டது. தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தபின், கரீம்கஞ்ச் ரத்னாரி தொகுதிக்கு உட்பட்ட எம்.வி. பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடிக்கு வாக்கு இயந்திரங்களை ஏற்றிச் செல்வதற்குத் தேர்தல் ஆணையம் சார்பில் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த வாகனம் வருவதற்கு மிகவும் தாமதமானது.
இதனால், வாக்குப்பதிவு மையத்தின் பொறுப்பு அதிகாரி திடீரென தனியார் வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்து அதில் மின்னணு வாக்கு இயந்திரங்களை ஏற்றிக்கொண்டு சென்றார். இந்த வாகனம் பத்தார்கண்டி தொகுதி பாஜக எம்எல்ஏவுக்குச் சொந்தமானது என்பது பின்னர்தான் தெரிந்தது.
ஆனால், பாஜக எம்எல்ஏவுக்குச் சொந்தமான வாகனத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஏற்றிச் செல்லப்பட்டதை அசாம் பத்திரிகையாளர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ வைரலானது. இந்தச் சம்பவம் தொடர்பாகத் தேர்தல் அதிகாரிகள் 4 பேரை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் கடும் கண்டனம் தெரிவித்து, இவிஎம் இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்ட வீடியோ காட்சியையும் இணைத்துள்ளார்.
அவர் பதிவிட்ட கருத்தில், "வியப்புக்குள்ளாகாத வகையில் சில விஷயங்கள் சாதாரணமாக நடக்கின்றன. 1. இவிஎம் இயந்திரம் கொண்டு செல்லப்பட்ட வாகனம் பாஜக வேட்பாளருக்கோ அல்லது அவர்களின் உறவினர்களுக்குச் சொந்தமானதாக இருக்கிறது. 2. இந்தச் சம்பவங்கள் வீடியோவாக எடுக்கப்பட்டாலும், பின்னர் அவை கண்டுகொள்ளப்படாமல் நிராகரிக்கப்படுகின்றன. 3. இந்த வீடியோக்களை யார் எடுத்தார்களோ அவர்களை பாஜக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி குற்றவாளியாக்கி, அவர்களை இழப்புக்குள்ளாகிறது.
உண்மை என்னவென்றால் ஏராளமான சம்பவங்கள் நடந்தும், அதில் எதுவுமே அவர்களுக்கு எதிராக நடக்கவில்லை. புகார்கள் மீது தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவிஎம் இயந்திரங்கள் பயன்பாடு குறித்து தேசியக் கட்சிகள் மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
அசாம் காங்கிரஸ் மூத்த தலைவர் கவுரவ் கோகய் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், "பாஜகவால் இப்படித்தான் வெல்ல முடியும். இவிஎம் இயந்திரங்களைக் கொள்ளையடித்தல், வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுதல் போன்றவை மூலம்தான் வெற்றி பெறுகிறார்கள். அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் பார்வையில் நடக்கிறது. ஜனநாயகத்துக்கு வேதனையான நாள்" எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கூட்டணிக் கட்சியின் தலைவர் பஹ்ருதின் அஜ்மல் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், "பிரிவினைவாதம் தோற்றுப்போனது. வாக்குகளை விலைக்கு வாங்குவது தோற்றது. வேட்பாளர்களை விலைக்கு வாங்குவது தோற்றது. வெற்று வார்த்தைகள் தோற்றன. இரு முதல்வர்கள் முறை தோற்றது. சிஏஏ குறித்த இரட்டை நிலைப்பாடு தோற்றது. பாஜகவின் கடைசி வழி, இவிஎம் இயந்திரங்களைத் திருடுவதுதான். ஜனநாயகப் படுகொலை" எனத் தெரிவித்துள்ளார்.