ஜம்மு-காஷ்மீர் போலீஸார் அண்மையில் வெளியிட்ட புள்ளி விவரத்தில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் சுமார் 200 தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை வேட்டையாடும் பணியை ராணுவம், மத்திய பாதுகாப்புப் படைகள், போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் சோபூரில் நடந்த என்கவுன்ட்டரில் ‘அல் பதிர்' தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் அப்துல் கனி சுட்டுக் கொல்லப்பட்டார். தலையில் குண்டுபாய்ந்து அவர் உயிரிழந்தார். குண்டு துளைக்காத ஹெல்மெட் அணிந்திருந்தால் அவர் உயிர் பிழைத்திருக்க முடியும். இதை கருத்தில் கொண்டு காஷ்மீர் ராணுவம், மத்திய பாதுகாப்பு படை, போலீஸாரிடம் இருந்து பாதுகாப்பு கவசங்களை திருட தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.
தீவிரவாதிகளின் உரையாடல்களை ‘ரா' உளவு அமைப்பு இடைமறித்து கேட்ட போது இந்த தகவல் தெரிய வந்துள்ளது. சத்தீஸ்கரில் செயல் படும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரிடம் இருந்து பாதுகாப்பு கவசங்களை திருடி பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல காஷ்மீர் பாதுகாப்பு படையினரிடம் இருந்தும் ஹெல்மெட், குண்டு துளைக்காத ஜாக்கெட் உள்ளிட்டவற்றை திருட தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டி வருகின்றனர்.
இதற்கு முன்பு துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை மட்டுமே காஷ்மீர் தீவிரவாதிகள் திருடி வந்தனர். தற்போது பாதுகாப்பு கவசங்களையும் திருட திட்டமிட்டிருப்பதால் பாதுகாப்பு படையினர் விழிப்புடன் இருக்கு மாறு ரா உளவு அமைப்பு அறி வுறுத்தியுள்ளது.