மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்: கோப்புப் படம். 
இந்தியா

விரக்தியில் மம்தா; அதனால்தான் பாஜக அல்லாத தலைவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்: பிரகாஷ் ஜவடேகர் கிண்டல்

பிடிஐ

திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தோல்வி பயத்தில் விரக்தியில் இருப்பதால்தான் பாஜக அல்லாத தலைவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விமர்சித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல் கட்டத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், 2-வது கட்டமாக 30 தொகுதிகளுக்கு இன்று நடக்கிறது. இதற்கிடையே, தேர்தலுக்கு முதல் நாளான நேற்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பாஜக அல்லாத தலைவர்களுக்குக் கடிதம் எழுதினார்.

அரசியலமைப்பின் கூட்டாட்சி மீதும், ஜனநாயகத்தின் மீதும் தாக்குதல் நடத்தும் பாஜகவுக்கு எதிராக ஒன்றுசேர வேண்டும். பாஜகவை வீழ்த்த தனியாக அணி உருவாக்க வேண்டும் எனக் கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட 15 கட்சிகளின் தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதினார்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று டெல்லியில் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி எழுதிய கடிதம் அவரின் விரக்தியைக் காட்டுகிறது. நந்திகிராம் மட்டுமல்ல மேற்கு வங்கத்திலேயே தோல்வி அடைந்துவிடுவோம் என்பதை மம்தா பானர்ஜி புரிந்துகொண்டார் என நினைக்கிறேன். அதனால்தான் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அரசியல் செய்துவரும் மம்தா பானர்ஜி, பாஜகவுக்கு எதிராகப் போராட காங்கிரஸிடம் ஆதரவு கோருகிறார். அரசியல் களத்தில் நிலைத்திருப்பதற்காகவே அந்தக் கடிதத்தை மம்தா எழுதியுள்ளார்''.

இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT